Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    

மதுரை,
பிளஸ்–2 தேர்வு எழுதிய மாணவனின் கணித விடைத்தாளில் 4 பக்கங்கள் மாயமானது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட மாணவருக்கு உரிய மதிப்பெண் வழங்காதபட்சத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
பிளஸ்–2 தேர்வு புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருந்ததாவது:–
என்னுடைய மகன் பிரகாஷ், புதுக்கோட்டை செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தான். கடந்த மார்ச் மாதம் பிளஸ்–2 தேர்வு எழுதினான். தேர்வு முடிவில் 1200–க்கு 1080 மதிப்பெண்கள் பெற்றான். இயற்பியல் பாடத்தில் 198 மதிப்பெண்ணும், வேதியியல் பாடத்தில் 189 மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 178 மதிப்பெண்ணும், கணிதப் பாடத்தில் 153 மதிப்பெண்ணும் பெற்று இருந்தான். கணிதத் தேர்வை நன்றாக எழுதி இருந்த போதிலும் குறைவான மதிப்பெண் கிடைத்தது எனது மகனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், கணித விடைத்தாள் நகல் கேட்டு அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பித்தேன். அதன்படி விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது.
44 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் நகலில் 35 முதல் 38 பக்கங்கள் இல்லாமல் இருந்தன. அந்த பக்கங்களில் தான் 40, ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடை எழுதியுள்ளான். 100 மதிப்பெண்ணுக்கான 10 கேள்விகளுக்கு விடை எழுதி 97 மதிப்பெண் பெற்றுள்ளான். 60 மதிப்பெண்ணுக்கான 10 கேள்விகளுக்கு விடை எழுதி 56 மதிப்பெண் பெற்றுள்ளான். ஆனால், 40 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு ஒரு மதிப்பெண் கூட வழங்கப்படவில்லை.
நியாயமற்றது பொதுவாக ஒரு கேள்விக்கு விடை எழுதவில்லை என்றால் விடைத்தாளின் முன்பகுதியில் மதிப்பெண் வழங்கும் இடத்தில் ‘– ‘என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். தவறாக எழுதி இருந்தால் ‘0‘(பூஜ்யம்) மதிப்பெண் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். எனது மகனுக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் 40 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும் ‘0‘ மதிப்பெண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால், என் மகன் 40 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும் விடை எழுதி உள்ளான் என்று தான் அர்த்தம்.
அப்படி இருக்கும் போது, என் மகன் எழுதிய முழுமையான விடைத்தாள் நகலை வழங்காதது நியாயமற்றது. எனவே, என் மகன் எழுதிய கணிதப் பாடத்துக்கான முழுமையான விடைத்தாளை வழங்க உத்தரவிட வேண்டும். என் மகனுக்கு 40 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும் சேர்த்து 40 மதிப்பெண் வழங்கி, அதன் அடிப்படையில் உரிய என்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பதற்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
உரிய முடிவு எடுக்க வேண்டும் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, முதல் 5 இடத்தில் இருக்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மனுதாரரின் மகனுக்கு ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட்டது. அதே போன்று, மனுதாரரின் மகன் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு ஆகியவற்றில் கணித பாடத்தில் எடுத்த மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து கணித பாடத்துக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.கணபதிசுப்பிரமணியன் கூறியதாவது:–
மனுதாரரின் மகன் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால் மனுதாரரின் மகனுக்கு 195.5 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறைக்கு ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும் தேர்வுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுதாரரின் மகன் இறுதித்தேர்வில் அனைத்து பாடங்களிலும் பெற்ற மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து கணித பாடத்தில் 38 மதிப்பெண் கூடுதலாக வழங்க உள்ளதாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது நியாயமற்றது.
இவ்வாறு வக்கீல் கூறினார்.
அவமதிப்பு நடவடிக்கை மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டபடி மனுதாரரின் மகன் காலாண்டு, அரையாண்டு தேர்வில் கணித பாடத்தில் எடுத்த மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து உரிய மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத்துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையை தொடரும்‘ என்று உத்தரவிட்டார்.

0 comments: