Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break

கச்சத்தீவு இந்தியாவிடம்தான் உள்ளது என்று திமுக தலைவர்கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், எனவே தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் இளைப்பாற உரிமை உள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்துக்கு இரு அரசுகளும் கருணாநிதியின் மனுவுக்கு பதில் தாக்கல் செய்து உள்ளனர். இந்த பதில் மனுவுக்கு கருணாநிதி பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்திருந்தது.
அதற்கு 2 வார கால அவகாசம் கேட்டு இருந்த கருணாநிதி இன்று பதில் தாக்கல் செய்துள்ளார். அந்த பதிலில், கச்சத்தீவு இந்தியாவிடம்தான் உள்ளது என்று பல்வேறு ஆதாரங்களை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளார். கச்சத்தீவை இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுமே சொந்தமாக கொண்டிருக்கவில்லை என்கிற மத்திய அரசின் பதில் தவறானது என்று கூறியுள்ள கருணாநிதி, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம் தமிழக மீனவர் ஒருவரால் கட்டப்பட்டது என்றும், படகு கவிழ்ந்ததால் நீந்தி உயிர் பிழைத்து கச்சத்தீவை அடைந்த அந்த மீனவர் 1917ம் ஆண்டு அந்த ஆலயத்தைக் கட்டினார் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் ஜமீன்தார் கச்சத்தீவைக் குத்தகைக்கு விட்டதற்கான ஆவணங்களும் உள்ளன என்று பல்வேறு விளக்கங்களை முன்வைத்துள்ள கருணாநிதி, கச்சத்தீவு இந்தியாவிடம்தான் உள்ளது என்றும், கச்சத்தீவு ஒப்பந்த விஷயத்தில் முறைகள் சரிவர கடைப்பிடிக்கப்படாததால் கச்சத்தீவு தற்போதும் இந்தியா வசம் உள்ளதாகவே கருதப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment