Wednesday, July 16, 2014

On Wednesday, July 16, 2014 by Anonymous in    
கருணாநிதி பற்றிய பேச்சு: முதல்வர் ஜெயலலிதா மறுப்பு

சட்டசபையில் நேற்று சமூக நலம்–சத்துணவு திட்டத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க. உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன் பேசினார். அவரது கருத்தை மறுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடனே குறுக்கிட்டு ஒரு விளக்கம் அளித்தார். 

‘‘சுனாமி தாக்கிய போது தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆஸ்பத்திரியில் போய் படுத்துக் கொண்டார். தொகுதி மக்களை கூட சந்திக்கவில்லை’’ என்று அப்போது அவர் பேசியதாக நேற்று மாலைமலரில் செய்தி வெளியாகி இருந்தது. இது தவறான தகவல் என்று முதல்–அமைச்சரின் முதன்மைச் செயலாளர் கே.என்.வெங்கட்ரமணன் மறுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள மறுப்பு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– 

15.7.2014 தேதியிட்ட தங்கள் நாளிதழின் ஏழாவது பக்கத்தில் ‘‘கருணாநிதி மீது குற்றச்சாட்டு தி.மு.க. வெளிநடப்பு’’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டு உள்ளீர்கள். அந்தச் செய்தியில், ‘‘2004–ல் சுனாமி ஏற்பட்ட போது நான் தான் முதல்–அமைச்சராக இருந்தேன். பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு இடங்களில் சந்தித்து ஆறுதல் கூறினேன். உதவிகளை வழங்கினேன். ஆனால், அப்போது சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்த தி.மு.க. தலைவர் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டார். 

தொகுதி மக்களைக் கூட சந்திக்க வில்லை’’ என்று முதல்– அமைச்சர் குறிப்பிட்டதாகத் தெரிவித்து, அதனால் தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேறியதாக திரித்துக் கூறப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். 

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் புஷ்ப லீலா ஆல்பன் 15.7.2014 அன்று சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, ‘‘சுனாமி பேரழிவால் பெற்றோரை இழந்து தவித்த சிறுவர்களுக்கும், வளரிளம் பெண்களுக்கும் ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது. 18 வயதுக்கும் மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்களுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி கலைஞர் அரசால் வழங்கப்பட்டது’’ என்று பேசினார். இது உண்மைக்கு மாறான தகவல் என்பதால், இதற்குப் பதில் அளித்து பேசிய முதல்– அமைச்சர், ‘‘2004 ஆம் ஆண்டு சுனாமி தமிழ்நாட்டைத் தாக்கிய போது நான் தான் முதல்–அமைச்சராக இருந்தேன். அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவிதமான உதவிகளைச் செய்து, காயப்பட்டவர்களை மருத்துவமனைகளில் சென்று பார்த்து பலருக்குப் பலவிதமான உதவிகளை நான் வழங்கினேன். 

அப்பொழுது உறுப்பினர் அவர்களின் தலைவர் சென்னையில் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சேப்பாக்கம் பகுதி கூட ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி. சென்னையிலே இருந்து கொண்டு சேப்பாக்கம் கூட செல்லவில்லை. பாதிக்கப்பட்ட தன் தொகுதி மக்களைக் கூட பார்க்க வில்லை அவரது தலைவர்’’ என்ற உண்மை நிலையை மாமன்றத்திற்கு எடுத்துக் கூறினார். 

தங்கள் நாளிதழில் சுட்டிக்காட்டியுள்ளது போல், ‘‘சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்த தி.மு.க. தலைவர் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டார்’’ என்று முதல்–அமைச்சர் பேசவில்லை. 

0 comments: