Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    



நியூயார்க்: உலகிலேயே அதிக குழந்தை திருமணங்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து குழந்தைகள் நலனுக்கான ஐ.நா.வின் அமைப்பான யுனிசெஃப், அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. வங்கதேசத்தில், மூன்றில் இரண்டு பெண்களுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் நடத்தப்பட்டுள்ளது.2005 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவில் 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 43 சதவீதத்தினருக்கு, 18 வயது பூர்த்தியாவற்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களைவிட, படிப்பறிவு இல்லாத சிறுமிகள் திருமணம் செய்விக்கப்படுவது 5.5 மடங்கு அதிகமாக உள்ளது.இந்தியாவில், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 4 வயது வரை உள்ள குழந்தைகளில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு 924 பெண் குழந்தைகள் என்ற அளவிலேயே ஆண்-பெண் விகிதாசாரம் உள்ளது.உலகில் பிறப்பு பதிவு செய்யப்படாத 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கடந்த 2000 ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டு வரையிலான கால அளவில் பிறந்த 7.1 கோடி குழந்தைகளுக்கு, பிறப்புச் சான்றிதழ் பெறப்படவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments: