Monday, September 22, 2014

On Monday, September 22, 2014 by Unknown in ,    


மீனவர் பிரச்னை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகப் பேச வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கூறியுள்ளார்.
 
இது குறித்து  செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் கூறியதாவது:-
 
“இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. தற்போது மீனவர் பிரச்னை அபாயகரமான நிலைக்குச் சென்றுள்ளது.
 
காங்கிரஸ் தலைமையில் மத்திய அரசு இருந்தபோது மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீனவர்கள் பிடிபட்ட மறுநாளே விடுவிக்கப்பட்டனர்.
 
ஆனால், தமிழகத்தில் புத்த பிட்சுகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற பின்னர்தான், மீனவர்கள் விடுதலையில் தாமதம் ஏற்பட்டது.
 
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும், 100 நாளில் மீனவர்கள் பிரச்னையைத் தீர்த்துவிடுவோம் என்று பாஜகவினர் பிரசாரம் செய்தனர். ஆனால், இன்னும் தீர்வு காணப்படவில்லை.
 
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவது வேதனைக்குரியது. மீனவர் பிரச்னையில் தமிழக பாஜகவினர் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆளுக்கொரு கருத்தைச் சொல்கின்றனர்.
 
பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நேரடியாகப் பேசி, மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இந்தப் பிரச்னை இரு நாடுகள் சம்பந்தப்பட்டதாகும். ஆனால், இங்குள்ள சில கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் இந்தப் பிரச்னையை கையில் எடுத்து மக்களைத் திசை திருப்புகின்றன. இலங்கைப் பிரச்னை தீர்ந்து விட்டால், பல கட்சிகளுக்கு அரசியல் நடத்த முடியாமல் போய்விடும்.
 
13 ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தி இலங்கையில் வாழும் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கருத்து. இதைத்தான் ஆட்சியில் இருந்தபோது வலியுறுத்தினோம்“ இவ்வாறு கூறினார்.

0 comments: