Tuesday, February 20, 2018

On Tuesday, February 20, 2018 by Tamilnewstv   
நல்ல குடிமகனாக உருவாக பள்ளிகள் வழிகாட்ட வேண்டும்
மயில்சாமி அண்ணாதுரை


திருச்சி
இளைய தலைமுறை நல்ல குடிமகனாக உருவாக பள்ளிகள் வழிகாட்ட வேண்டும் என்றார் இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.
திருச்சி செளடாம்பிகா கல்விக் குழுமத்தின் மெளன்ட் லிட்ரா ஸி பள்ளியின்(சிபிஎஸ்சி) ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை பேசியது:
மாணவர்கள் பாடத்தில் மட்டுமல்லாது விளையாட்டு போட்டிகளில் முன்னணியில் வருவதைக் காட்டிலும் நல்ல குடிமகனாக உருவாக வேண்டும். அதற்கு பள்ளிகள், ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். இதற்கு பெற்றோரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் இருந்த பள்ளிகளில் இருந்த உள்கட்டமைப்பு வசதிகள் இன்று பன்மடங்கு அதிகமாகியுள்ளன. இது மாணவர்களுக்கு பல்வேறு பரிமாணங்களில் சிறப்பாக விளங்க பேரூதவி வருகின்றன. மாற்றங்களுக்குட்பட்டது தான் உலகம். அந்த மாற்றத்தை நாம் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டாலேவாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முதல் செயற்கைக்கோளை ரஷ்யாவின் உதவியோடு தான் விண்ணுக்கு அனுப்பியது. ஆனால், தற்போது 40 நாடுகள் தங்களது செயற்கைக்கோளை இஸ்ரோ வழியாக அனுப்ப ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த அளவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் நம்நாடு பெரிய முன்னேற்றத்தை பெற்றுள்ளது.
இதுபோட்டிகள் நிறைந்த உலகம். நாங்கள் கடந்த மாதம் ஒரு செயற்கைக்கோள் தயாரித்தோம் என்றால், அதே விட நேர்த்தியாக அடுத்து தயாரிக்கும் செயற்கைக்கோளை தயாரிக்க வேண்டிய தேவையும், அவசியமும் உள்ளது.
செவ்வாய் கோளுக்கு செயற்கைக்கோளை அனுப்ப அமெரிக்கா 5 முறையும், ரஷ்யா 9 முறையும் முயற்சித்த பிறகே வெற்றி பெற்றன. ஆனால், முதல் முயற்சியிலேயே சந்திரயான் செயற்கைக்கோளை நாம் வெற்றிகரமாக ஏவினோம். அதற்கு காரணம் பல்வேறு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டோம்.
நம் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதை பெற்றோர்கள் செய்து முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
பள்ளிக்கூட படிப்பு மட்டும் இந்த காலத்தில் போதுமானதல்ல. அதையும் தாண்டி நிறைய திறன்களை கற்றுக் கொண்டால் மட்டுமே இந்த உலகில் நாம் சாதிக்க முடியும். அதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோரும் இதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
விழாவில், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் பேசுகையில், எந்த தொழிலிலும், பணியிலும் போட்டியாளரை வைத்து தான் நமது வெற்றி உறுதிசெய்யப்படுகிறது. போட்டியாளர் நம்மை விட திறமையானவராக இருந்தால் நாம் பின்னுக்கு தள்ளப்படுகிறோம். போட்டியாளர் இருந்தால் தான் நமதுதிறமைகளை மேன்மெலும் வளர்த்துக் கொள்ள முடியும்.
வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல், அனைத்திலும் பங்கேற்பு என்பது முக்கியமானது. அப்போது தான் நாம் எந்தநிலையில் இருக்கிறோம் என்பது தெரியவரும். இல்லையெனில் வெற்றிக்கான திறமை நம்மிடம் இருக்கிறதா என்பது கூட தெரியாமலேயே போய்விடும்.
தன்னம்பிக்கை, துணிச்சல், விடாமுயற்சி ஆகியவை தான் வெற்றிக்கு முக்கியமானவை. இதை மாணவர்கள் மனதில் கொண்டால் எதிலும் வெற்றி கிடைக்கும் என்றார்.
விழாவுக்கு குழுமத் தலைவர் எஸ். ராமமூர்த்தி, செயலாளர் ஆர். செந்தூர்செல்வன், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

0 comments: