Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by farook press in ,    
கோவை அருகே உள்ளது ஒண்டிப்புதூர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர். பஸ் நிறுத்தம் அருகே ஒரு வேன் மற்றும் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
மதியம் 12.30 மணியளவில் கோவை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது. அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மினி டோர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி டோர் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.
பின்னர் அந்த லாரி கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய பின்னர் பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது. அதன் பின்னர் அங்குள்ள கடை மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 1 ஆண் மற்றும் 3 பெண்கள் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் சிங்காநல்லூர் போலீசாரும், கிழக்கு போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காயமடைந்தவர்கள் அப்பநாயக்கன்பட்டி புதூரைச் சேர்ந்த முருகன் (வயது 65), அவரது மனைவி கலா மணி (52), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி அம்சவேணி (35), பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன், அவரது மனைவி ஜெயந்தி என்பது தெரிய வந்தது. மற்றொரு பெண் பெயர் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து சிங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

0 comments: