Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown in    

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்த்துள்ளன.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி மண்டியா, மைசூரு, சாமராஜ்பேட்டை, உப்பள்ளி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயன்ற 50-க்கும் மேற்பட்டோர் செய்யப்பட்டனர். மண்டியா, மைசூரு, சாமராஜ்பேட் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மண்டியாவில் இன்று முழு அடைப்பு: இதனிடையே, மண்டியாவில் காவிரி நலன் பாதுகாப்புக்குழு கூட்டம் முன்னாள் எம்பி ஜி.மாதேகெளடா தலைமையில் நடந்தது. இதில், செவ்வாய்க்கிழமை மண்டியா மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
9-இல் கர்நாடக முழு அடைப்பு: பெங்களூரில் திங்கள்கிழமை கன்னட சலுவளி கட்சித்தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கூடிய கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர், செப்.9-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
மேலும், பெங்களூரில் உள்ள ரிச்மண்ட் சாலையில் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். டவுன்ஹாலில் கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினர் அதன் தலைவர் டி.ஏ.நாராயணகெளடா தலைமையில் தீப்பந்த ஊர்வலம் நடத்தி, உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினர்.
தீர்ப்பு குறித்து முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியது: தீர்ப்பு நகல் செவ்வாய்க்கிழமை காலைக்குள் கிடைத்துவிடும். காலை 10 மணிக்கு சட்டவல்லுநர்களின் ஆலோசனை பெறப்படும். பின்னர், விதானசெளதாவில் மாலை 3 மணிக்கு அனைத்துக்கட்சிக்கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்

0 comments: