Monday, March 16, 2015
பிரசவத்தில் குழந்தை இறந்ததையடுத்து அரசு மருத்துவமனையை உறவினர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பூர், 15 வேலம்பாளையம் அரவைக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தேவி, கடந்த 12-ஆம் தேதி பிரசவத்துக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சனிக்கிழமை காலை தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்துக்குப் பின், குழந்தை இறந்து விட்டதாகக் கூறி மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர், அவர்கள் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய 15 வேலம்பாளையம் பகுதியிலுள்ள கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் உடலை கையில் வைத்திருந்த உறவினர்களில் ஒருவரான பியூலா என்பவர் திடீரென குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டதாகவும், குழந்தைக்கு உயிர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தையை எடுத்துக்கொண்டு, மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்தே தான் பிறந்ததாக தெரிவித்தனர். ஆனால், பிறந்தபோது குழந்தைக்கு உயிர் இருந்தது எனவும், மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் குழந்தை இறந்தது என புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவர்களின் சமரசத்தையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், குறைபிரசவம் காரணமாக குழந்தை இறந்தேதான் பிறந்தது. அவர்கள் கூறுவதுபோல் நடக்க வாய்ப்பில்லை என்றனர். இச்சம்பவம் காரணமாக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது
காங்கயம் அருகே, நெய்க்காரன்பாளையத்தில் கடந்த 9-ஆம் தேதி விவசாயி வீட்டில்
30 பவுன் நகைகள், ரூ. 1.50 லட்சம் ரொக்கம் திருடுபோனது தொடர்பான வழக்கில், 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை போலீஸார் மீட்டனர்.
காங்கயம் அருகே நெய்க்காரன்பாளையதைச் சேர்ந்தவர் சாமியப்பகவுண்டர் (72), விவசாயி. இவருடைய மனைவி சாமியாத்தாள் (72). கடந்த 9-ஆம் தேதி இந்த தம்பதி தோட்டத்துக்கு சென்றிருந்த சமயத்தில், மர்ம நபர்கள் அவர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.1.50 ரொக்கம், 30 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக 3 பேரை ஞாயிற்றுக்கிழமை காங்கயம் போலீஸார் கைது செய்தனர். இதில், திருட்டு நடைபெற்ற வீட்டிற்கு அருகே
குடியிருக்கும் பிரகாஷ்( 25) என்பவர் தான் இதற்கு திட்டமிட்டுத் கொடுத்ததாக தெரியவந்துள்ளது. அவருடைய நண்பர்களான திருச்சி, தொட்டியம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமன் (19), தொட்டியம் அருகே கொசவன்பட்டிப் பகுதியைச் சேர்ந்த சேகர் (40) ஆகிய இருவரும் பிரகாஷுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து மொத்தம் 40 பவுன் நகைகள், ரூ.1.35 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ராமன், ஏற்கனவே தொட்டியம் பகுதியில் 5 திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சிறை தண்டனை பெற்ற பழைய குற்றவாளி என விசாரணையில் தெரிய வந்தது. மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பு காங்கயம் அருகே, சிவன்மலை - கல்லேரி கிராமச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சென்னிமலை பசுபவபட்டியை சேர்ந்த தம்பதியை வழிமறித்து 6 பவுன் சங்கிலியை சேகரும், பிரகாஷும் பறித்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ரூ. 4.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உள்விளையாட்டு அரங்கப் பணிகளை மூன்று மாதங்களில் முடித்திட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மை செயலர் சம்பு கல்லோலிகர் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ரூ. 4.40 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 30,450 சதுர அடி பரப்பில் கட்டப்படும் இந்த உள் விளையாட்டு அரங்கின் தரைதளத்தில் விளையாட்டு வீரர்கள் தங்கும் அறை, உடைமாற்றும் அறை, கூட்ட அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், முக்கிய விருந்தினர் அறை, கழிப்பறைகள், முதல் தளத்தில் உயர்மட்ட பார்வையாளர்கள் அமரும் பகுதி ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மை செயலர் சம்பு கல்லோலிகர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பூரில் அமைக்கப்பட்டு வரும் இந்த உள்விளையாட்டு அரங்கின் கட்டுமானப் பணிகளை மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உள்விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தலாம். இந்தக் கல்லூரி வளாகத்திலேயே ஊரக விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 400 மீட்டர் தடகள ஓடுதளப் பாதை
அமைக்கத் திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை போல திருப்பூர் மாவட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தையும் அவர் பார்வையிட்டார். அவ்விடம் விளையாட்டு அரங்கம் அமைக்க உகந்ததாக இருப்பதுடன், எதிர்காலத்தில் விளையாட்டு பள்ளி அமைக்கவும் சிறப்பான இடமாக இருப்பதாக தெரிவித்த அவர், மாவட்ட நிர்வாகம் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்து கருத்துரு அனுப்பி வைக்கவும் அலுவலர்களிடம் தெரிவித்தார்.
பின்னர், மங்கலம் சாலை ஆண்டிப்பாளையம் குளத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்ட அவர், அங்கு விளையாட்டுத் துறை மூலம் நீர் விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, ஆட்சியர் கு.கோவிந்தராஜ், விளையாட்டு மேம்பாட்டு ஆணையக கோவை மண்டல முதுநிலை மேலாளர் ராஜமகேந்திரன், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் பி.ஆர்.குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ஸ்டான்லி பி.மேத்யூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்
திருப்பூர் மண்டல ஊர்க்காவல் படை துணை மண்டலத் தளபதி பதவிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் வெளியிட்டுள்ள செய்தி:
திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள துணை மண்டல தளபதி பதவிக்கு, விருப்பமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 50 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் தங்களைப் பற்றிய சுயகுறிப்பு, அனுபவம், பொதுப்பணி ஈடுபாடு உள்ளிட்ட விவரங்களுடன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை திங்கள்கிழமை (மார்ச் 16) முதல் 27-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நேரில் சந்தித்து, விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
திருப்பூரில் தமுஎகச 13வது மாநில மாநாடு கவிதை, கட்டுரை போட்டிகளில் மாணாக்கர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை போட்டிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாடு மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நான்கு நாட்கள் திருப்பூரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் குஜராத்தி திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெற்றன.
வரவேற்புக்குழுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், இந்த போட்டிகளுக்கான ஏற்பாட்டாளர் எஸ்.சுப்பிரமணியம் உள்பட வரவேற்புக்குழுவினர் இப்போட்டிகளைத் தொடக்கி வைத்தனர்.
கட்டுரை போட்டிக்கு கல்வி - அறிவைத் தூண்டுவதா? மதிப்பெண்ணைத் தாண்டுவதா? அல்லது கல்வெட்டு முதல் கணினி வரை.. தமிழே காண்! அல்லது எந்நாட்டிலும் இல்லாத சாதி, இங்கு மட்டும் ஏன்? என்ற மூன்று தலைப்புகளிலும், கவிதை போட்டிக்கு சாதி மதங்களைப் பாரோம்! அல்லது மெல்லத் தமிழ் இனி வளரும்! அல்லது தீண்டாமைக்குத் தீயிடுவோம்! என்ற மூன்று தலைப்புகளிலும் நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் திருப்பூர் மட்டுமல்லாது, கோவை, ஈரோடு, தாராபுரம் உள்பட சுற்று வட்டார ஊர்களில் இருந்தும் பெருந்திரளான கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வத்தோடு பங்கேற்றனர். இதில் சில மாணாக்கர்கள் கவிதை, கட்டுரை என இரு போட்டிகளிலும் பங்கேற்றனர்.
நடுவர் குழுவினர் சிறந்த கட்டுரைகள் மற்றும் கவிதைகளைத் தேர்வு செய்வர். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.ஆயிரம் மற்றும் பதக்கம், புத்தகம் பரிசாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு மார்ச் 22ம் தேதி திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெறும் தமுஎகச மாநில மாநாட்டு கலை இரவு நிகழ்ச்சியில் பரிசளிப்பு விழா நடைபெறும்.
Subscribe to:
Posts (Atom)










