Monday, March 16, 2015

On Monday, March 16, 2015 by farook press in ,    
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை போட்டிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாடு மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நான்கு நாட்கள் திருப்பூரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் குஜராத்தி திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெற்றன.
வரவேற்புக்குழுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், இந்த போட்டிகளுக்கான ஏற்பாட்டாளர் எஸ்.சுப்பிரமணியம் உள்பட வரவேற்புக்குழுவினர் இப்போட்டிகளைத் தொடக்கி வைத்தனர்.
கட்டுரை போட்டிக்கு கல்வி - அறிவைத் தூண்டுவதா? மதிப்பெண்ணைத் தாண்டுவதா? அல்லது கல்வெட்டு முதல் கணினி வரை.. தமிழே காண்! அல்லது எந்நாட்டிலும் இல்லாத சாதி, இங்கு மட்டும் ஏன்? என்ற மூன்று தலைப்புகளிலும்,  கவிதை போட்டிக்கு சாதி மதங்களைப் பாரோம்! அல்லது மெல்லத் தமிழ் இனி வளரும்! அல்லது தீண்டாமைக்குத் தீயிடுவோம்! என்ற மூன்று தலைப்புகளிலும் நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் திருப்பூர் மட்டுமல்லாது, கோவை, ஈரோடு, தாராபுரம் உள்பட சுற்று வட்டார ஊர்களில் இருந்தும் பெருந்திரளான கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வத்தோடு பங்கேற்றனர். இதில் சில மாணாக்கர்கள் கவிதை, கட்டுரை என இரு போட்டிகளிலும் பங்கேற்றனர்.
நடுவர் குழுவினர் சிறந்த கட்டுரைகள் மற்றும் கவிதைகளைத் தேர்வு செய்வர். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.ஆயிரம் மற்றும் பதக்கம், புத்தகம் பரிசாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு மார்ச் 22ம் தேதி திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெறும் தமுஎகச மாநில மாநாட்டு கலை இரவு நிகழ்ச்சியில் பரிசளிப்பு விழா நடைபெறும்.
-------------------

0 comments: