Monday, March 16, 2015

On Monday, March 16, 2015 by Unknown in ,    
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ரூ. 4.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உள்விளையாட்டு அரங்கப் பணிகளை மூன்று மாதங்களில் முடித்திட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மை செயலர் சம்பு கல்லோலிகர் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ரூ. 4.40 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 30,450 சதுர அடி பரப்பில் கட்டப்படும் இந்த உள் விளையாட்டு அரங்கின் தரைதளத்தில் விளையாட்டு வீரர்கள் தங்கும் அறை, உடைமாற்றும் அறை, கூட்ட அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், முக்கிய விருந்தினர் அறை, கழிப்பறைகள், முதல் தளத்தில் உயர்மட்ட பார்வையாளர்கள் அமரும் பகுதி ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மை செயலர் சம்பு கல்லோலிகர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பூரில் அமைக்கப்பட்டு வரும் இந்த உள்விளையாட்டு அரங்கின் கட்டுமானப் பணிகளை மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உள்விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தலாம். இந்தக் கல்லூரி வளாகத்திலேயே ஊரக விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 400 மீட்டர் தடகள ஓடுதளப் பாதை
அமைக்கத் திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை போல திருப்பூர் மாவட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தையும் அவர் பார்வையிட்டார். அவ்விடம் விளையாட்டு அரங்கம் அமைக்க உகந்ததாக இருப்பதுடன், எதிர்காலத்தில் விளையாட்டு பள்ளி அமைக்கவும் சிறப்பான இடமாக இருப்பதாக தெரிவித்த அவர், மாவட்ட நிர்வாகம் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்து கருத்துரு அனுப்பி வைக்கவும் அலுவலர்களிடம் தெரிவித்தார்.
பின்னர், மங்கலம் சாலை ஆண்டிப்பாளையம் குளத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்ட அவர், அங்கு விளையாட்டுத் துறை மூலம் நீர் விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, ஆட்சியர் கு.கோவிந்தராஜ், விளையாட்டு மேம்பாட்டு ஆணையக கோவை மண்டல முதுநிலை மேலாளர் ராஜமகேந்திரன், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் பி.ஆர்.குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ஸ்டான்லி பி.மேத்யூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்

0 comments: