Monday, March 16, 2015

On Monday, March 16, 2015 by Unknown in ,    



பிரசவத்தில் குழந்தை இறந்ததையடுத்து அரசு மருத்துவமனையை உறவினர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பூர், 15 வேலம்பாளையம் அரவைக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தேவி, கடந்த 12-ஆம் தேதி பிரசவத்துக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சனிக்கிழமை காலை தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்துக்குப் பின், குழந்தை இறந்து விட்டதாகக் கூறி மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர், அவர்கள் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய 15 வேலம்பாளையம் பகுதியிலுள்ள கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் உடலை கையில் வைத்திருந்த உறவினர்களில் ஒருவரான பியூலா என்பவர் திடீரென குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டதாகவும், குழந்தைக்கு உயிர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தையை எடுத்துக்கொண்டு, மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்தே தான் பிறந்ததாக தெரிவித்தனர். ஆனால், பிறந்தபோது குழந்தைக்கு உயிர் இருந்தது எனவும், மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் குழந்தை இறந்தது என புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவர்களின் சமரசத்தையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், குறைபிரசவம் காரணமாக குழந்தை இறந்தேதான் பிறந்தது. அவர்கள் கூறுவதுபோல் நடக்க வாய்ப்பில்லை என்றனர். இச்சம்பவம் காரணமாக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது

0 comments: