Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்டில் இந்திய அணி, 266 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
இங்கிலாந்தின் சௌதாம்ப்டனில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 569 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
இங்கிலாந்து கேப்டன் குக் பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக, ஃபாலோ ஆன் முடிவைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார். இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாகத் தெரிவித்தது. 
 
இதையடுத்து  445 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டும் முனைப்பில் 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் 5, ரஹானே 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
 
கடைசி நாளில் 333 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் ஆடத் தொடங்கிய இந்திய அணி, ரன் எதுவும் சேர்க்கும் முன்பே ரோகித்தின் விக்கெட்டைப் பறி கொடுத்தது. கேப்டன் தோனி 6 ரன்களிலும் கோஹ்லி 15 ரன்களிலும் ஆட்டமிழக்க, புவனேஷ்வர் குமாரும் முகமது ஷமியும் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆக, இந்திய அணி, மிகவும் தடுமாறியது. கடைசி விக்கெட்டாகக் களம் இறங்கிய பங்கஜ் சிங், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசிவிட்டு, அதே ஓவரில் 9 ரன்களில் அவுட் ஆனார். ரஹானே மட்டும் நிலைத்து நின்று, கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல், 52 ரன்கள் சேர்த்தார்.
 
எனினும் இறுதியில் இந்தியா, 266 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இங்கிலாந்தின் மொயீன் அலி, முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்சில் மட்டும் 6 விக்கெட்டுகளும் சாய்த்தார். எனினும் இரண்டு இன்னிங்சிலுமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.
 
முதல் டெஸ்டை இரண்டு அணிகளும் டிரா செய்திருந்தன. முந்தைய இரண்டாவது டெஸ்டில் இந்தியா வென்றது. எனவே, 3ஆவது டெஸ்டில் தோற்றாலும் 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர், 1 - 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், ஆகஸ்டு 7ஆம் தேதி மன்ச் என்ற இடத்தில் தொடங்குகிறது.