Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் ‘டின்’ (ஸ்குவாஷ் பலகை) உயரத்தைக் குறைத்தது, தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத் தக்கூடிய தீபிகா பலிக்கல்-ஜோஷ்னா சின்னப்பா ஜோடிக்கு சாதகமாக அமைந்தது. சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தின் தீபிகா பலிக்கல்-ஜோஷ்னா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. 1998-ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் சேர்க்கப்பட்ட பிறகு அதில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்கள் என்ற பெருமையோடு சென்னை திரும்பியிருக்கிறது தீபிகா-ஜோஷ்னா ஜோடி. தங்கப் பதக்கத்தோடு சென்னை திரும்பிய அவர்கள் “தி இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் ‘டின்’ உயரத்தை 17 அங்குலத்திலிருந்து 13 அங்குலமாக குறைத்தது மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கு சாதகமாக இருந்தது. ஏனெனில் நாங்கள் ஏற்கனவே 13 அங்குல உயரத்தில் பயிற்சி எடுத்திருந்தோம். ‘டின்’ உயரம் குறைவாக இருந்ததால் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துவது எளிதாக இருந்தது. ஆனால் எதிர் வீராங்கனைகளின் ஷாட்டை சமாளிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது என்றனர். நாட்டுக்காக பதக்கம் வெல்வது எப்போதுமே மிகப்பெரிய கௌரவம் என தெரிவித்த ஜோஷ்னா, “ஒலிம்பிக் போட்டியில் ஸ்குவாஷ் இல்லை. அதனால் எங்களைப் போன்ற ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகளின் வாழ்க்கையில் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வதுதான் மிகப்பெரிய சாதனை. நம்முடைய நாட்டில் காமன்வெல்த் போட்டி மிகப்பெரிய போட்டியாகும். அதில் தங்கப் பதக்கம் என்பது மிகச்சிறப்பான ஒன்று” என்றார். சர்வதேச தரவரிசையில் 21-வது இடத்தில் இருக்கும் ஜோஷ்னா, தீபிகாவுடன் ஜோடி சேர்ந்து ஆடியது குறித்தும், அதன்பலம் குறித்தும் பேசுகையில், “தீபிகா எப்போதுமே சிறப்பாக ஆடி புள்ளிகளைப் பெற்றுத்தருவதில் திறமைசாலி. அதற்காக நான் புள்ளிகளைப் பெற்றுத்தரவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர் என்னைவிட அதிக அளவில் புள்ளிகளைப் பெற்றுத்தந் தார். எங்களுக்கு எதிராக ஆடியவர் களால் எங்களின் பலவீனத்தைக் கண்டறிய முடியவில்லை. நாங்களும் பலவீனமாக இல்லை. அதனால் எங்கள் இருவரில் யார் மீது தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துவது என எதிரணி வீராங்கனைகளுக்கு தெரியவில்லை” என்றார். சர்வதேச தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் தீபிகா பலிக்கல் கூறுகையில், “நாங்கள் இருவரும் ஆரோக்கியமான நட்புறவுடன் இருக்கிறோம். காமன்வெல்த் போட்டிக்கு முந்தைய பயிற்சி எங்களுக்கு நன்றாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறோம்” என்றார்.