இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆண்டர்சன் தொடர்ந்து வசையில் ஈடுபட வேண்டும் என்று மைக்கேல் வான் கூறியுள்ளார்.

கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டையும், பந்தையும் தவிர வீரர்கள் பேசுவது, வசைபாடுவது முறையல்ல என்கிறார் மைக்கேல் ஹோல்டிங், ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து இந்திய வீரர்களை நோக்கி வசைமாரி பொழியவேண்டும் என்கிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான்.

"4வது டெஸ்ட் போட்டியிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய வீரர்கள் மீது வசையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் மீண்டுமொரு முறை அவர்கள் ஆண்டர்சன் மீது புகார் எழுப்பாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவர் இங்கிலாந்துக்காக தொடரை வென்று கொடுப்பவர், தேவையில்லாமல் புகாரில் சிக்கி அவர் பலவீனமடைந்து விடக்கூடாது.

கடந்த ஆண்டு மைக்கேல் கிளார்க், ஆண்டர்சனை நோக்கிக் கூறிய வசை வார்த்தை அல்லது ஆண்டர்சன் தோனியை நோக்கி கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிக்கும் போது நடுவர் குறுக்கிட்டு கண்டிக்க வேண்டும்.

இது போன்ற கெட்ட வார்த்தைகள் விவகாரத்தில் தன் பெயர் இழுக்கப்படுவதை ஜேம்ஸ் ஆண்டர்சன் விரும்ப மாட்டார். அவருக்கு இளம் வாரிசுகள் உள்ளனர். அவர்களுக்கு இத்தகைய வார்த்தைகளை தம் தந்தை பயன்படுத்துகிறார் என்று தெரிவது நல்லதல்ல.

ஷிகர் தவன், தோனி ஆகியோர் ஆண்டர்சன், பிராட் பந்து வீச்சில் திக்கித் திணறிவருகின்றனர். அதை நினைவுபடுத்தினாலே போதும், தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டியதில்லை.

ஆண்டர்சனை விளையாடும் போது தோனி அங்கும் இங்குமாக அலைந்து திக்கி திணறுகிறார். அதனை நினைவுபடுத்தினாலே போதுமானது. அந்த வகையில் ஆண்டர்சன் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்யலாம்” என்கிறார் மைக்கேல் வான்.