Monday, September 22, 2014

On Monday, September 22, 2014 by Unknown in ,    



புதுவையை அடுத்துள்ள சின்ன கோட்டக் குப்பத்தில், இளைஞர் ஒருவர் மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை இரும்புக் கம்பியால்  அடித்துக் கொலை செய்துள்ளார்.

புதுவையை அடுத்த சின்ன கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகன் 30 வயதுடைய குணசீலன்.

கட்டிட தொழிலாளியான இவர் மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். இவர் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே செலவழித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு குணசீலன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் மதுகுடிக்க தனது தாய் 52 வயதுடைய தனலட்சுமியிடம் பணம் கேட்டார்.

அப்போது ஏற்கனவே அதிகமாக மது குடித்துள்ளதால் எனவே மீண்டும் குடிக்க வேண்டாம் என்று தனலட்சுமி அறிவுரை கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து பணம் கேட்டு குணசீலன் நச்சரித்துள்ளார்.

ஆனால் தனலட்சுமி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குணசீலன் அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து தனலட்சுமியை சரமாரியாக தாக்கினார்.

இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். இதைப் பார்த்ததும் குணசீலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தனலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு மருதத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து தகவல் அறிந்த கோட்டக் குப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட குணசீலனை தேடி வருகிறார்கள்.

0 comments: