Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    

தாராபுரம் நகரில் 13 டாஸ்மாக் கடைகள் உள்ளன. திருப்பூர் மாவட்ட மண்டல டாஸ்மாக் மேலாளர் கடந்த 3 நாட்களாக பல்லடம், அவினாசி, திருப்பூர், டவுன் பகுதிகளில் ஆய்வு செய்த பின்னர் தாராபுரம் மதுக்கடைகளில் ஆய்வு செய்தார்.
டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் சாதாரண குவார்ட்டர் பாட்டில் ரூ.90 முதல் ரூ.95 ஆகவும், பீர் பாட்டிலுக்கு 110 ரூபாயாவும் விற்பனை செய்து வருகின்றனர். மண்டல மேலாளர் ஆய்வுக்கு வருகிறார் என்று தெரிந்ததும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கே விற்பனை செய்தனர். 
வழக்கம்போல் சரக்கு வாங்கும் குடிமகன் ஆய்வின்போது ரூ.95 கொடுத்து ஒரு குவார்ட்டர் கேட்டார். ரூ.90 தான் ஒரு குவார்ட்டர் என்று விற்பனையாளர் ரூ.5 –ஐ திருப்பி கொடுத்தார். மேலும் இங்கு பார் இல்லை.
வெளியில் மது அருந்திக்கொள்ளுங்கள் என்று மரியாதையாக டாஸ்மாக் கடை விற்பனையாளர் கூறினார். என்ன இன்றைக்கு மரியாதையெல்லாம் பலமாக உள்ளது என்று அந்த குடிமகன் ஆச்சரியமடைந்தார். சிறிது நேரத்திலேயே விபரம் அறிந்த குடிமகன்கள் பல நாட்கள் தேங்கி வைத்திருந்த தங்கள் ஆதங்கத்தை கொட்டினர். 
பஸ் நிலைய மதுக்கடைக்கு பார் இல்லை. பக்கத்திலேயே டம்ளர், தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்கின்றனர்.
எப்போதுமே அரசு நிர்ணய விலைக்கு மது விற்பனை செய்வதில்லை. ரூ.5 முதல் அதிகம் கொடுத்துத் தான் வாங்குகிறோம். இதைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மது விற்பனையாளரை அழைத்து கடும் எச்சரிக்கை செய்தனர்.
சில கடைகளில் பெரிய ஊசிகொண்டு திறந்து அதனுள் உள்ள சரக்கை உறிஞ்சி எடுத்த பின்னர் அதற்கு பதிலாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதா? என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த 4 நாட்களாக தாராபுரம் குடிமகன்களுக்கு சரியான விலையில் கலப்படம் இல்லாமல் சரக்கு கிடைத்து வருகிறது.
மகிழ்ச்சியில் உள்ள தாராபுரம் குடிமகன்களுக்கு இது நீடிக்குமா? அல்லது அதிகாரிகள் சென்றதும் மீண்டும் தொடருமா? என்று தெரியவில்லை.

0 comments: