Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by Unknown in ,    

பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் அமராவதி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜுக்கு அவர் வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதம்:
உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் பகுதிகளில் போதிய அளவில் பருவமழை பெய்யாத காரணத்தால் வறட்சி நிலவுகிறது. பாசனத்திற்கு மட்டுமின்றி, குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் தண்ணீர் பிரச்னையை போக்கும் வகையில் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்.
அமராவதி ஆற்றில், திருப்பூர் மாவட்ட பகுதியில் 60-க்கு மேற்பட்ட கிணறுகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மேற்கண்ட பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றோரப் பகுதி விவசாயிகளும் பாசனத்திற்கு ஆற்றுநீரை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் கிடைக்கவும், பாசனத்திற்காகவும் அமராவதி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும்.
90 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்பொழுது 80 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. வறட்சி நிலவும் இச்சூழ்நிலையில் அமராவதி அணையின் தண்ணீரை உடனடியாக திறந்துவிட்டு ஆற்றின் கடைக்கோடி பகுதிக்கும் சென்றடையும் வகையில் நீர்மேலாண்மை செய்வதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் அமராவதி ஆற்றுநீரை நம்பியுள்ள பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர், விவசாயிகளைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

0 comments: