Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by Unknown in ,    

உடுமலை அரசு மருத்துவமனை செவிலியர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இது குறித்த விவரம்:
உடுமலை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் சுகந்தி. இவர், சம்பவ தினமான வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சுகந்தியின் வாயை பொத்தி அவர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதையடுத்து, அருகில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் சுகந்தியை காப்பாற்றி தாக்குதல் நடத்தியவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து தலைமை மருத்துவ அலுவலர் காவல்துறையில் எழுத்துமூலம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், உடுமலை சென்னிமலைபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் தான் செவியலியர் சுகந்தி மீது தாக்குதல் நடத்தியவர் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுப்பிரமணியம் மீது போலீஸார் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவிலியர் சுகந்தி மீது தாக்குதல் நடத்திய சுப்பிரமணியத்தை கைது செய்யாத போலீஸாரை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில், உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலை டிஎஸ்பி பிச்சை, ஆய்வாளர் தவமணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில், சுப்பிரமணியத்தை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
பேச்சுவார்த்தையில், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பி.ஆனந்தராஜ், மா.பாலசுப்பிரமணியம், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சனிக்கிழ மை மாலை சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

0 comments: