Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
சென்னை, செப். 13–
தி.மு.க. ஆட்சியில் சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.1000 கோடி செலவில் புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் 2010–ம் ஆண்டு மார்ச் 13–ந்தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. அங்கு சட்டசபை கூட்டத் தொடர்களும் நடத்தப்பட்டன.
2011–ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் புதிய தலைமை செயலக கட்டிடத்தில் இருந்து சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது.
புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த கட்டிடம் உறுதியாக இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அறக்கப்பட்டது.
நீதிபதி ரெகுபதி கமிஷன், புதிய தலைமை செயலகம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தது.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்த புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டதாலும், அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்அமைச்சராக இருந்ததாலும், இந்த கட்டிடம் விவகாரம் குறித்து அவரிடமும் விசாரணை நடத்தி, வாக்கு மூலத்தை பதிவு செய்ய ஒரு நபர் கமிஷன் முடிவு செய்தது.
இதையடுத்து, நீதிபதி ரெகுபதி கமிஷன் முன்பு ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிடம் குறித்து விளக்கம் அளிக்கும்படி கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், கருணாநிதி சார்பில் வக்கீல் நீலகண்டன் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் விசாரணை தொடர்பான ஆவணங்கள் தன் கட்சிக்காரருக்கு தேவைப்படுகிறது. எனவே அதை வழங்கவேண்டும் என்று வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி ரெகுபதி, ‘அதுபோன்ற ஆவணங்களை கருணாநிதி நேரில் ஆஜராகும்போது அவரிடம் வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 18–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்று கருணாநிதி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

0 comments: