Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by Unknown   


தமிழர்கள் சம்மந்தப்பட்ட பிரச்னையில், சுப்ரமணியன் சுவாமியை பேச வைத்து தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆழம் பார்க்கிறாரா? என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 
இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில்," ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு எப்படி நடந்துகொள்ளும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து விளக்கியதும், சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கும், அவர்களின் படகுகளை திருப்பித் தராமல் இலங்கை அரசு பிடித்து வைத்திருப்பதற்கும் தான் கூறிய யோசனைகளே காரணம் என்றும் சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது தமிழர்களிடையே, குறிப்பாக அன்றாடம் பாதிப்பிற்குள்ளாகும் தமிழக மீனவர்களிடையே கடும் கோவத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாளில் இருந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள், ஒரிரு நாளில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம், தமிழக முதல்வர் பிரதமருக்கு விடுக்கும் உடனடி கோரிக்கையும், அதனை ஏற்று பிரதமர் மோடி கொடுக்கும் அழுத்தமே என்று தமிழக பா.ஜ.க.வினர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால், மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனரே தவிர, அவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்க மறுத்து வருகிறது. தங்களை மட்டும்  விடுவித்துவிட்டு, படகுகளை பிடித்து வைத்திருப்பது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றது என்று மீனவர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியாவின் அயலுறவு கொள்கை எப்படியிருக்கும் என்பதையும், மீனவர்களின் படகுகளை திருப்பித் தராதீர்கள் என்று இலங்கை அரசுக்கு யோசனை கூறவும் சுப்ரமணியன் சுவாமி யார்? இந்த நாட்டின் அயலுறவு அமைச்சரோ அல்லது இணை அமைச்சரோ அல்ல. மத்திய அரசில் அவர் எந்த அமைச்சரவை பொறுப்பையும் வைத்திருக்கவில்லை. இன்றைய நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், கட்சியின் அரசியல் தந்திர வகுப்புக் குழுவின் தலைவராகவும் மட்டுமே உள்ளார். இக்குழுவில் இடம்பெற்றுள்ள சேஷாத்திரி சாரி என்பவரும் இதேபோல் பேசிவருகிறார். இவர்கள் எப்படி, இந்தியாவின் அயல் விவகாரம் தொடர்பாக கருத்துக் கூறலாம்?

மீனவர் பிரச்சனை பற்றி அயலுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் குழு சந்தித்துப் பேசியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழக மீனவர்களை சந்தித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். பிறகு, இந்திய – இலங்கை அரசுகளின் மீன்வளத் துறை செயலர்கள் மட்டத்தில் டெல்லியில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை பிடித்து வைத்திருக்கவும் யோசனை கூறியதே நான்தான் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியதன் பொருள் என்ன? இப்படியெல்லாம் பேச இவருக்கு யார் அதிகாரம் தந்தது?

சுப்ரமணியன் சுவாமி பேசுவது அவரது சொந்தக் கருத்து என்று அவ்வப்போது தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகின்றனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சுப்ரமணியன் சுவாமியின் பேச்சு, மீனவர்கள் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண்பதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று வருத்தப்பட்டுள்ளார். தமிழக தலைவர்கள் மட்டுமே இவருடைய கருத்தை எதிர்த்து பேசுகின்றனர். ஆனால், மத்திய அரசோ அல்லது பா.ஜ.க. தலைமையோ அல்லது பிரதமர் நரேந்திர மோடியோ சுப்ரமணியன் சுவாமியின் பேச்சுகள் பற்றி கருத்தேதும் இதுவரை கூறவில்லை. அப்படியானால், சுப்ரமணியன் சுவாமி, மத்திய அரசின் அறிவிக்கபடாத, இரகசிய தூதராக என்று கேட்கிறோம்.

தமிழர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனையில் இப்படி திமிர் பிடித்து கருத்துக்கூற இவருக்கு மத்திய அரசு அதிகாரமளித்துள்ளதா? ஏன் இதனை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கண்டிக்கவில்லை? சுப்ரமணியன் சுவாமியை பேச வைத்து தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆழம் பார்க்கிறாரா பிரதமர் நரேந்திர மோடி? அப்படியானால், வெளிப்படையாக சொல்லிவிட்டு செய்வதில் ஏன் தயக்கம்? 

தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் என்னதான் தமிழினத்திற்கும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் ஆதரவாக பேசினாலும், அதன் இந்தியத் தலைமை தமிழர்கள் பிரச்சனையில் நேர்மையான ஆதரவு தரும் என்ற நம்பிக்கை நாம் தமிழர் கட்சிக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கடைபிடித்த அதே ‘கொள்கை’ நிலையையே பா.ஜ.க. அரசும் கடைபிடிக்கும் என்று தேர்தல் பரப்புரையிலேயே பேசினோம். ஏனெனில் தமிழர்களுக்கு எதிரான இன அழித்தல் போருக்கு பா.ஜ.க. தலைமை ஆதரவளித்தது, அதை நாங்கள் மறக்கவில்லை. அதுதான் இப்போது நிரூபணமாகி வருகிறது. நாங்கள் கேட்பதெல்லாம், எங்கள் பிரச்சனைகளில், ராஜபக்சவுடன் நின்றுகொண்டு கருத்துக் கூற சுப்ரமணியன் சுவாமி யார்? இதற்கான விளக்கத்தை நரேந்திர மோடி அரசு உடனடியாக தமிழக மக்களுக்குத் தெரிவித்திட வேண்டும்.
 
தமிழனுக்கு எதிராகவும், தமிழினத்தின் விடுதலைப் போராட்டதிற்கு எதிராகவும் தொடர்ந்து பேசிவரும் சுப்ரமணியன் சுவாமி, தமிழ்நாட்டிற்கு வந்தால் அவரை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்துவோம். அப்போது, தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறும் தமிழக பா.ஜ.க.வும் எங்களோடு இணைந்து போராட வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

0 comments: