தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை.
இன்றைய காலகட்டத்தில் தாத்தாவுக்கும் பேரனுக்கும் உள்ள பாசம் எந்த அளவு உள்ளது என்பதை சொல்கிறது இக்கதை. வயது முதிர்ந்த காலத்தில் தாத்தாவும், பாட்டியும் பேரன்களோட விளையாடுவது, கொஞ்சுவது என்று நேரத்தை கழிப்பார்கள்.
ஆனால் இவர்களின் பாசம் பேரன்களின் இளமை காலம் வரை தொடருமா என்று பார்த்தால் அதன் வாய்ப்பு மிகவும் குறைவு. அதனுடைய வலியும், யதார்த்தத்தையும் சொல்லி இருக்கும் படம் மஞ்சப்பை.
கதை என்ன ?
நம்ம விமல் சென்னை ஐ.டி கம்பெனியில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் இளைஞன். சிறுவயதிலே தாய், தந்தையை இழந்திட்ட அவருக்கு எல்லாமே தாத்தா தான். இந்த தருணத்தில் கண் டாக்டர் லக்ஷ்மிமேனனை கண்ட உடனே காதல் தீப்பொறி கசிகிறது.
பிறகு என்ன அவள் பின்னாலே விமல் ஓட, இவரும் விமலை கண்டு உடனே அலறி ஓட கடைசியில் இரண்டு பேருக்கும் காதல் பத்திக்கிறது.
இதில் விமலுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆகவேண்டும் என்ற ஒரு குறிக்கோள், அதுவும் லக்ஷ்மி மேனன் காதலித்த நேரத்தில் கைகூட அமெரிக்கா செல்லும் வரை, கிராமத்திலிருக்கும் தன் தாத்தா ராஜ்கிரணை சென்னைக்கு வரவழைத்து தன்னுடன் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு அழைத்து வருகிறார் விமல்.
கிராமத்திலிருந்து வரும் ராஜ்கிரனின் அப்பாவித்தனமான பேச்சும் அவர் செய்யும் சில விஷயங்கள் விமலுக்கு எதிராக அமைகிறது. தான் வசிக்கும் அபார்ட்மென்ட் ஆட்களிலிருந்து, காதலி வரை எல்லோரும் தாத்தாவை திரும்ப ஊருக்கு அனுப்பச் சொல்ல, மனம் நொந்து போகிறார் விமல்.
ஒரு கட்டத்தில், தனது நெடுநாள் கனவான அமெரிக்கா செல்லும் வாய்ப்பே ராஜ்கிரணால் கேள்விக்குறியாகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுபதை பதைக்க வைக்கிறது ‘க்ளைமேக்ஸ்’.
நடிகர் நடிகர்களின் பங்களிப்பு
கேட்கவே வேண்டாம் இந்த படத்தின் உண்மையான ஹீரோ ராஜ் கிரண் தான். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் பெரியவர்களை அப்படியே பிரதிபலிக்கிறார். அவருடைய வெகுளிதனமான பேச்சும், பேரன் மீது மட்டும் இல்லாமல் அவர் சென்னையில் குடி இருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் வாழும் அனைவர் மீதும் அவர் காட்டும் அன்பு கிராமத்து யதார்த்தம்.
நிச்சயமாக தவமாய் தவமிருந்து படத்திற்கு பிறகு அவருக்கு பெயர் சொல்லும் படமாக இந்த படம் இருக்கும்.
விமல் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்து இருக்கிறார், ராஜ்கிரணைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்கும் பேரனாகவும், லக்ஷ்மி மேனனிடம் சில்மிஷம் செய்யும் காதலனாகவும் விமலுக்கு டபுள் டிராக். சிட்டி கேரக்டர் என்பதால் மேக்கப் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.
லக்ஷ்மி மேனன் வழக்கம் போல் நார்மல் ஹீரோயின் டைப்பில் வலம் வந்தாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பலம்
கிராமத்து உறவுகளின் அன்பையும், இயந்திரத்தனமாக வாழ்கின்ற சிட்டி லைப்பையும் அப்படியே பிரதிபலிப்பதே பெரிய பலம். ராஜ்கிரனின் வெகுளியான நடிப்பு, விறுவிறுப்பாக கொண்டு சென்ற திரைக்கதை அமைப்பையும், படத்தினுடைய ஷார்ப் எடிட்டிங்கையும் கண்டிப்பாக பாராட்டியாகவேண்டும்.
பலவீனம்
வழக்கம் போல் வரும் பாடல்கள், விமலின் காமெடி என்ற பெயரில் மொக்க போட்ட சில காட்சிகள் தவிர பெரிய ‘லா லா’ அளவுக்கு இல்லை.
இயக்குனர் என்.ராகவன் சற்குணத்தின் சிறந்த சிஷ்யன் என்பதை நிருபித்து உள்ளார்.
மொத்தத்தில் மஞ்சப்பை – நகரத்தில் ஒரு கிராமத்து வாசம்
0 comments:
Post a Comment