Friday, August 22, 2014

On Friday, August 22, 2014 by farook press in ,    
திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வை.ஆனந்தன் தலைமையில்
 ​ புதன்கிழமை​
நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால் உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: திருப்பூர் மாவட்டத்தில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டமாக மாற்றப்பட்ட பிறகும் அதற்கென அரசுத் தரப்பில் செய்யப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதில் மாநில அரசு மிகுந்த மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது. 
திருப்பூர் மக்கள் தங்கள் உழைப்பால் ஈட்டும் வருவாயில் பெரும் பகுதியை தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத்திற்கே செலவழிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டும், ஏற்கனவே உள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், இதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் ஏழை, எளிய மக்களின் நிலையைக் கருத்தில் கொள்ளாமல் இக்கோரிக்கையின் மீது தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இம்மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம், அவிநாசி உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. மேலும் திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையிலேயே 24 மணி நேர மருந்தகம் செயல்பாட்டில் இல்லை. மருத்துவமனை வளாகம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகள் பணம் பறிப்பவையாக இருப்பதால் ஏழை, எளிய மக்கள் தங்கள் உடல்நிலையைப் பாதுகாக்க அரசு மருத்துவமனையையே நாடுகின்றனர்.
எனவே தமிழக அரசு இந்த மாவட்ட மக்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவக் கல்லூரியும், சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையும் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். உடனடியாக பணிகளையும் தொடங்கிட வேண்டும்.  அத்துடன் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள், மருந்துகள் முறையாக இருப்பு வைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாதத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மருத்துவத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் நிர்வாகி நீக்கம் (துணைத் தலைப்பு)
அமைப்பின் செயல்பாட்டை சீர்குலைக்கும் விதத்தில் செயல்படும் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா.வடிவேலை தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்குவது என வாலிபர் சங்க மாவட்ட செயற்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளது.
இவ்வாறு வாலிபர் சங்க பத்திரிகை செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: