Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in    
சூர்யா - சமந்தா - சந்தோஷ் சிவன் - யுவன் ஆகியோரின் கூட்டணியில், பல வருடங்களுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அஞ்சான்

தனது அண்ணனான ராஜுவைத் தேடி, வாக்கிங் ஸ்டிக்கை மட்டுமே உதவியாகக் கொண்டு மும்பைக்கு வந்து சேர்கிறார் உடல் ஊனமுற்ற கிருஷ்ணா(சூர்யா). என் அண்ணன் எங்க இருக்காரு? என்ற கேள்வியுடன் ராஜு வழக்கமாகச் செல்லும் இடங்களில் ஒவ்வொருவரிடமும் கிருஷ்ணா விசாரித்து தெரிந்துகொள்வது சிறு சிறு பிளாஷ்பேக்.

சிறு வயதிலேயே மும்பைக்கு ஓடிவந்த ராஜு(சாரி, ராஜு நஹி ராஜு பாய்), தனது நண்பனான சந்துருவுடன்(வித்யுத் ஜம்வால்) சேர்ந்து கள்ளக் கடத்தல் தொழில் செய்கிறார். ராஜுவும், கிருஷ்ணாவும் ஓருயிர் ஈருடல் போன்ற நெருக்கமான நண்பர்கள். சுற்றியிருக்கும் நண்பர்களைப் போலவே வாலிப வயதிலேயே பெரிய அண்டர்வேர்ல்ட் தாதாக்களின் வேலைகளை செய்துவந்ததால் இவர்களுக்கு எதிரிகளும் ஏராளம்.
இந்த சூழ்நிலையில் புதிய போலிஸ் கமிஷனர் இவர்களது கூட்டத்தை அடக்க நினைக்கும் போது, கமிஷனரை வழிக்கு கொண்டு வர அவரது மகளை(சமந்தா) ராஜு பாய் கடத்துகிறார். கடத்தல் காதலாக மாறி இவர்கள் டூயட் பாடச் செல்லும்போது ஏதோ ஒரு எதிரியால் சந்துரு கொல்லப்படுவது, ராஜு பாய்க்கு மிகப்பெரிய அடியாக அமைந்துவிடுகிறது. நண்பனைக் கொன்றவனைக் கொல்லவேண்டும் என்ற வெறியுடன் செல்லும் ராஜு பாய் வழியிலேயே சுடப்பட்டு ஆற்றில் தள்ளப்படுகிறார் என்பது அந்த பிளாஷ்பேக்கின் தொகுப்பு. 

பிளாஷ்பேக் அனைத்தையும் தெரிந்துகொள்ளும் கிருஷ்ணாவுக்கு, அவரது அண்ணனைக் கொன்றவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. அண்ணனைக் கொன்றவர்களை ஒற்றைக் காலுடன் கிருஷ்ணா என்ன செய்யப்போகிறார்? சமந்தா என்ன ஆனார்? என்பது மீதிக்கதை.

முரடனாக வரும் ராஜு பாய் கேரக்டரிலும் சரி, அமைதியான கிருஷ்ணா கேரக்டரிலும் சரி, தேவையான நடிப்பைக் கொடுத்து தனது திறமையை நிரூபித்திருக்கிறார் சூர்யா. அஞ்சான் மூலம் பாடகராகவும் அறிமுகமாகும் சூர்யா மேலும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

சுடிதார், மாடர்ன் டிரஸ், பிகினி என அனைத்து உடையிலும் சமந்தாவின் அனைத்து அங்க லாவண்யங்களும் எக்ஸ்போஸ் ஆகி ரசிகர்களை கிரங்கடிக்கிறது. அனேகமாக சமந்தாவின் உடைக்கு அதிக செலவாகியிருக்காது. ஒரு கேங்ஸ்டர் ஸ்டோரியாக இருந்தும் நடிகைக்கு இத்திரைப்படத்தில் நல்ல ஸ்கோப் இருப்பது, சமந்தாவின் நடிப்புத் திறமைக்கு கிடைத்த சன்மானம்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஐடம் சாங்க் கூட மெலடியாகவே கேட்கிறது இத்திரைப்படத்தில். துப்பாக்கி குண்டுகளுக்கிடையே யுவனின் பின்னணி இசையும் போட்டி போடுகிறது. ’காதல்  ஆசை  யாரை  விட்டதோ! உன்  ஒற்றை  பார்வை  ஓடி  வந்து  உயிரை தொட்டதோ!’ பாடல் குண்டு மழைக்கிடையே ஒரு சாரல். 


சந்தோஷ் சிவன் ரெட் டிராகன் கேமராவை பிழிந்துவிட்டர் என்று சொல்லலாம். மும்பை நகரத்தை புதுமாதிரியாக காட்டி ரசிகர்களை ஒவ்வொரு ஃபிரேமிலும் கவர்ந்திருக்கிறார். இது காலையில் நடக்கும் காட்சி, இது பிறபகல் நடக்கும் காட்சி, இது மாலையில் நடக்கும் காட்சி என்று சொல்லத்தக்க வகையில் சிறந்ததொரு பணியை செய்திருக்கும் சந்தோஷ் சிவன் தனது பெயருக்கு பின்னாலிருக்கும் விருதுகளுக்கு பெருமை சேர்க்கிறார்.ஹீரோவிலிருந்து ஓரமாக நிற்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் வரை அனைவரையும் செதுக்கியிருக்கிறார் லிங்குசாமி. ஒரு புது சூர்யாவைக் கொடுப்பேன் என சொன்னதை அப்படியே நிரூபித்துவிட்ட லிங்குசாமி, திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரே ஒரு பாட்டுக்காக பிளாஷ்பேக் போறதெல்லாம் கொஞ்சம் ஓவர் சார். ’என் எதிரியிடம் கூட துரோகிகள் இருக்கக் கூடாது’ என்ற படத்தின் முடிவு விசில் சத்தத்துடன் தியேட்டரை விட்டுக் கிளம்ப ரசிகர்களை தூண்டுகிறது.

0 comments: