Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
துபாய் நாட்டில் இறந்த கட்டுமானத் தொழிலாளியின் உடலை மீட்டுத் தரக்கோரி அவரது குடும்பத்தினர் சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கட்டுமானத் தொழிலாளி
சிவகங்கையை அடுத்த கீழப்பூங்குடி அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மருதன் (வயது 28). இவரது மனைவி மேனகா(24). இவர்களது மகன் தஞ்சன் (3). இந்தநிலையில் மாரிமுத்து மருதன் கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு பணியில் நீடித்த அவர் அடிக்கடி குடும்பத்தினருடன் போனில் பேசி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 11–ந்தேதி இரவு அவரது குடும்பத்தினருக்கு துபாயில் இருந்து ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், நான் மாரிமுத்து மருதனின் நண்பர் என்று கூறினார். அத்துடன் மாரிமுத்துமருதன் இறந்து விட்டதாகவும், 3 நாட்களில் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாரிமுத்துமருதனை போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது. ஆனாலும் அவர் பணியில் இருந்த நிறுவனத்தினை தொடர்பு கொண்டபோது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரது உடல் இதுவரை ஊர் வந்து சேரவில்லை.
நடவடிக்கை தேவை
இதையடுத்து மாரிமுத்து மருதனின் தம்பி ஜெயக்குமார் என்பவர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராஜாராமனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–
எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது. நான் கூலி வேலை பார்த்து பெற்றோரை காப்பாற்றி வருகிறேன். என் அண்ணனின் மனைவி, மகன் ஆகியோர் அவரது வருமானத்தை நம்பியே இருந்தனர். எங்களுக்காகவே என் அண்ணன் பணத்தை கடன் வாங்கிச் செலுத்திவிட்டு துபாய் நாட்டில் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு சென்றார். அங்கு அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்த எங்கள் குடும்பத்தினர் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளனர்.
அத்துடன் அவரது உடலை பார்க்க முடியவில்லையே என்று நாங்கள் அனைவரும் வேதனையில் தவித்து வருகிறோம். எனவே எனது சகோதரனின் உடலை மீட்டு இங்கு கொண்டு வருவதற்கு அரசுத்தரப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

0 comments: