Sunday, September 07, 2014

On Sunday, September 07, 2014 by farook press in ,    
திருப்பூர் : பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையில் இருந்து இன்று (செப்., 7) தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால், தண்ணீர் திருட்டை தடுப்பதற்கான நடவடிக்கை ஆமை வேகத்தில் நடக்கிறது. விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் உறுதியளித்தபடி, கண்காணிப்பு குழுக்கள் இன்னும் அமைக்கப்படவில்லை.

பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 93,766 ஏக்கர் நிலங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் தருணங்களில், பிரதான கால்வாயில் ஷட்டரை உடைத்தும், குழாய் அமைத்தும், வாய்க்காலுக்கு அருகில் கிணறு வெட்டியும், சைடு போர்வெல் அமைத்தும் தண்ணீர் திருடப்படுகிறது. இதனால், பாசன நீர் முறையாக கிடைப்பதில்லை. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, கடந்த 2ம் தேதி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலும், 4ம் தேதி கோவை கலெக்டர் அலுவலகத்திலும், கலெக்டர்கள் தலைமையில், பாசன சங்க நிர்வாகிகள், வருவாய்த்துறை, போலீஸ், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, பி.ஏ.பி., அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

இதில், அதிகாரிகள் அங்கம் வகிக்கும் கண்காணிப்பு குழு அமைப்பது; அரசு மற்றும் தனியார் நிலங் களில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குழாய்களை முன்னதாகவே அகற்றுவது; பாசன நீரை திருடினால், மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.இதனடிப்படையில், தாசில்தார், பி.ஏ.பி., உதவி செயற்பொறியாளர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர், போலீஸ் இன்ஸ்பெக்டர்,பிறதுறை அதிகாரிகள் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். ஆனால், இன்று (7ம் தேதி) தண்ணீர் திறக்க உள்ள நிலையில், நேற்று வரை அரசு துறை அதிகாரிகள் கொண்ட குழு, இரண்டு மாவட்டங்களிலும் அமைக்கப்படவில்லை. மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரமும் வழங்கப்படவில்லை. முன்னதாகவே ஆய்வு செய்து, வாய்க்கால் கரை பகுதிகளில் முறைகேடாக பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "பிரதான கால்வாயில், 5 அல்லது 10 கி.மீ., நீளத் துக்கு ஒரு குழு என்ற அடிப்படையில் அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறை, போலீஸ், மின்வாரியம் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளின் பெயர்களை மாவட்ட நிர்வாகம் தயார் செய்து வருகிறது. தண்ணீர் திறப்பதற்கு முன், குழு அமைக்கப்படும்,' என்றனர்.

0 comments: