Monday, September 22, 2014

On Monday, September 22, 2014 by farook press in ,    
பெண்கள் போல் ஆண்களால் மனஉறுதியுடன் இருக்க முடியாது என்று திருப்பூரில் நடந்த மனைவி நல வேட்பு நாள் விழாவில் நடிகர் கே.பாக்கியராஜ் பேசினார்
வாழ்க்கை பாதையில் இன்ப, துன்பங்களை சரிபாதியாக ஏற்றுக்கொண்டு கணவருக்காகவும், குடும்பத்துக்காகவும் பல தியாகங்களை செய்த தனது துணைவி லோகாம்பாளின் பிறந்தநாளை மனைவி நல வேட்பு விழாவாக வேதாத்திரி மகரிஷி உருவாக்கி உள்ளார். அதன்படி திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுத சாமி திருமண மண்டபத்தில் மனைவி நல வேட்பு நாள் விழா மற்றும் அன்னை லோகாம்பாளின் 100–வது ஜெயந்தி விழா நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய்–லலிதா தம்பதியர் தலைமை தாங்கினார்கள். ஆழியார் அறிவுதிருக்கோவில் அறங்காவலர் நடராஜன்–கமலம் தம்பதியர் முன்னிலைவகித்தனர். திருப்பூர் வேதாத்திரி மருத்துவமனை டாக்டர் சீனியம்மாள் சிங்காரவேலு இறைவணக்கம், குருவணக்கம் பாடினார். திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ஜி.வி.பழனிச்சாமி–வசந்தி தம்பதியர் வரவேற்று பேசினார்கள். ஜெய் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கராஜ்–சாவித்திரி தம்பதியர், திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர் செல்லகிருஷ்ணன்–பரிமளா தம்பதியர், மற்றும் புதுமண தம்பதியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான கே.பாக்கியராஜ்–பூர்ணிமா தம்பதியர் கலந்துகொண்டு பேசினார்கள்.
விழாவில் கலந்து கொண்ட சுமார் 2 ஆயிரம் தம்பதியரும், புதுமண தம்பதிகள் போல் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக்கொண்டனர். கணவன்மார்கள் அனைவரும் தங்கள் மனைவியிடம் பரஸ்பரம் அன்பு செலுத்தியும், மனமொத்த தம்பதிகளாக இருப்பதாகவும் உறுதி எடுத்துக்கொண்டனர்.
விழாவில் திரைப்பட நடிகர் கே.பாக்கியராஜ் பேசும் போது கூறியதாவது:–
நான் கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தவன். பெண்கள் கூட்டமாக சேர்ந்து பேசுவதை அதிகமாக கேட்டுள்ளேன். பெண்கள் அளவுக்கு ஆண்களால் மனஉறுதியுடன் இருக்க முடியாது. ஊடலும், கூடலும் இருந்தால்தான் அது தாம்பத்தியம். இந்தியாவில் மட்டுமே ஆணும், பெண்ணும் பேசி பழகாமல் பெற்றோர் பார்த்து நிச்சயித்து திருமணம் முடித்து வைக்கும் கலாசாரம் உள்ளது. வெளிநாடுகளில் அந்த கலாசாரம் இல்லை.
இதனால் தான் இந்தியாவில் விவாகரத்து குறைவாக உள்ளது. தன்னலம் கருதாமல் நமக்காக பாடுபடும் நமது மனைவி மீது நாமும் அன்பு செலுத்த வேண்டும். இங்கு நான் மாலை மாற்றும் போது, 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த எனது திருமணம் மீண்டும் நினைவுக்கு வந்தது. இதுவரை எனது மனைவியின் கண்களை நான் நேருக்கு நேர் பார்த்ததில்லை. இன்று அதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள்.

0 comments: