Monday, September 22, 2014

On Monday, September 22, 2014 by farook press in ,    
உடுமலையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பின்னி பிணைந்து விளையாடிய 6½ அடி நீள சாரை பாம்புகளை வனத்துறையினர் பிடித்தனர்.
உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 2 சாரை பாம்புகள் நேற்று பிற்பகல் நீண்ட நேரம் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து விளையாடிக்கொண்டிருந்தன. அதை காண அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது. அதே சமயம் குடியிருப்பு பகுதியில் பெரிய பாம்புகள் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் உடுமலை வனச்சரக அதிகாரிகளின் அறிவுரைப்படி வேட்டை தடுப்பு காவலர் மலர்வண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் லட்சுமணன், கார்த்திக் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த 2 பாம்புகளும் அங்குள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் தென்னை மட்டைகள் போட்டு வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தன. அதில் ஒரு பாம்பை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்தனர். உடனே மற்றொரு பாம்பு அங்குள்ள காய்ந்த தென்னை மட்டைக்குள் புகுந்தது.
அப்போது அங்கு கல் இடுக்குகளில் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது ஒரு கல் இடுக்கில் இருந்த கண்ணாடிவிரியன் பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். அத்துடன் தப்பியோடிய அந்த சாரை பாம்பையும் வனத்துறையினர் பிடித்தனர். உயிருடன் பிடிக்கப்பட்ட 2 சாரைப் பாம்புகளும் சுமார் 6½ அடி நீளம் இருந்தன. கண்ணாடி விரியன் பாம்பு 3½ அடி நீளம் இருந்தது. அவற்றை வனத்துறையினர், வனத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

0 comments: