Monday, September 22, 2014

On Monday, September 22, 2014 by farook press in ,    
திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள ஆடுவதை கூடத்தில் இடவசதி இல்லாததால் இறைச்சிக்கடைக்காரர்கள் தவித்து வருகிறார்கள். இதனால் 4 மண்டலங்களிலும் ஆடுவதை கூடம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஆடு இறைச்சி கூடங்களை முறைப்படுத்தும் வகையில், தென்னம்பாளையம் பகுதியில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் நவீன ஆடுவதை கூடம் அமைக்கப்பட்டு கடந்த 2010–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இந்த ஆடுவதை கூடம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றுள்ளது. இந்த கூடம் ஆடுகளை வதைக்கும் அறை, ஆடுகளை பரிசோதிக்க டாக்டர்கள், மயக்க நிலையை ஏற்படுத்தி ஆடு அறுக்கும் வசதி, ‘ஹலால்’ முறை, என்று நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஆடுகளை அறுத்து, ‘‘சீல்’’ வைக்கப்பட்ட இறைச்சியாக கொடுக்க, ஒரு ஆட்டுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சி பகுதி முழுவதற்கும் ஒரே ஆடுவதை கூடம் என்பதாலும், தொலைவு அதிகம் இருப்பதாலும் அதிருப்தி அடைந்த இறைச்சி கடைக்காரர்கள், ஆடுவதை கூடத்துக்கு செல்வதை தவிர்த்து வந்தனர். தொடக்கத்தில் கெடுபிடி விதித்த மாநகராட்சி அதிகாரிகள், பின்னர் காலப்போக்கில் இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இதனால் கடந்த பல மாதங்களாக ஆடுவதை கூடத்துக்கு இறைச்சிக்கடைக்காரர்கள் யாரும், ஆடுகளை வதை செய்ய கொண்டுவருவதில்லை. இதன் காரணமாக ஆடுவதை கூடம் செயல்பாடு இன்றி இருந்தது. இந்த நிலையில் இந்த ஆடுவதை கூடத்தை ஒப்பந்தம் எடுத்தவரும் வருமானம் இன்றி இருந்தார்.
தற்போது புதிதாக ஏலம் விடப்பட்டதை தொடர்ந்து ஆடுவதை கூடத்தில் அறுக்கப்படாத ஆடுகளை, மாநகராட்சி எல்லைக்குள் விற்கக்கூடாது. மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இறைச்சி கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கினார்கள். இதன் காரணமாக நேற்று முதல் வியாபாரிகள் மீண்டும் ஆடுவதை கூடத்துக்கு வரத்தொடங்கினார்கள். நேற்று அதிகாலையிலேயே ஏராளமான வியாபாரிகள், தங்கள் ஆடுகளை இங்கு வதை செய்து சீல் வைத்து சென்றனர். ஏராளமான வியாபாரிகள் ஒரே நேரத்தில் ஆடுவதை கூடத்துக்கு வந்ததால், அங்கு இட நெருக்கடி ஏற்பட்டு ஆடுகளின் தோல்களை உறிக்க சிரமப்பட்டனர்.

0 comments: