Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by farook press in ,    
திருப்பூரில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடுபோட்டு சித்ரவதை செய்த கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறதாவது:–

திருப்பூர் காங்கயம் கிராஸ்ரோட்டில் உள்ள கே.என்.பி. காலனியை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (24). இவர் எலெக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்தார். இவருக்கும், கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த நஷ்ரினா பானு (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது நஷ்ரினாபானுவுக்கு அவருடைய பெற்றோர் 8 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் வரதட்சணையாக கொடுத்தனர். திருமணமான 15 நாட்களிலேயே நஷ்ரினாபானுவிடம் இருந்த நகையில் 4 பவுனை கணவர் முகமது இலியாஸ் மற்றும் அவருடைய தாயார் ஷெரின் பேகம் (50) ஆகியோர் சேர்ந்து பிடுங்கி கொண்டு, மேலும் ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
முகமது இலியாஸ் மற்றும் அவருடைய தாயார் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த நஷ்ரினாபானு உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நஷ்ரினாபானு அங்கு சிகிச்சை முடிந்து கணவர் வீட்டுக்கு செல்லாமல் அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் வரதட்சணை கொடுமை தொடர்பாக நஷ்ரினாபானு திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நஷ்ரினா பானு, முகமது இலியாஸ் மற்றும் இரு குடும்பத்தாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசமடைந்த கணவன், மனைவி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நஷ்ரினா பானு தன்னுடைய கணவர் வீட்டிற்கு சென்று மீண்டும் வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் மீண்டும் அவர் வரதட்சணை கொடுமைக்கு ஆளானதாக தெரிகிறது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த நஷ்ரினா பானுவை அவருடைய கணவர் முகமது இலியாஸ் ஆக்சாபிளேடை சூடுபடுத்தி மனைவியின் தொடையில் சூடு போட்டுள்ளார். மேலும் சிகரெட்டால் நஷ்ரினா பானுவின் உடல் முழுவதும் சூடுபோட்டு சித்ரவதை செய்து, அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நஷ்ரினா பானு திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவருடைய புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதுருன்னிசாபேகம் வழக்குப்பதிவு செய்து முகமது இலியாஸ், ஷெரின் பேகம் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவன் சிகரெட்டால் சூடுபோட்டு சித்ரவதை செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: