Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
மாமல்லபுரம் அருகே ஏ.டி.எம். காவலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் கைது செய்யப்பட்டார். கூட்டாளிகள் 3 பேரை தேடி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிருஷ்ணன்காரணை சத்யசாய்பாபா கோவில் அருகில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம். மைய காவலாளி முருகன் கடந்த ஜூன் மாதம் 14–ந் தேதி நள்ளிரவு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் கருவியால் உடைக்க நடந்த முயற்சி தோல்வி அடைந்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.
இந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் தீவிர விசாரணையில், ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் முக்கிய குற்றவாளியாக ஈடுபட்டுள்ளார் என்பதும் அவருக்கு துணையாக 3 பேர் இருந்ததும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
செங்கல்பட்டு பொன்விளைந்தகளத்தூர் சாலையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான சதீஷ்குமார்(வயது 32) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் திருப்போரூர் மேலையூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரன் என்பவரது மகன் ஆவார்
மேலும் சதீஷ்குமாருக்கு துணையாக வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்த அன்பழகன், திருநாவுக்கரசு, திருக்கழுக்குன்றம் தேவராஜ் ஆகிய 3 பேரும் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள இந்த 3 பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் உத்திரமேரூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டார். சதீஷ்குமார் மீது ஏற்கனவே அவரது கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த வழக்கு மற்றும் ஓட்டேரி, திருப்போரூர், மறைமலைநகர், மேல்மருவத்தூர் போன்ற பகுதிகளில் கார், மோட்டார் சைக்கிள் திருட்டு என பல திருட்டு வழக்குகள் உள்ளன.

0 comments: