Monday, October 27, 2014

On Monday, October 27, 2014 by Unknown in    
வடகிழக்கு பருவமழை தீவிரம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 தினங்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அதேபோன்று மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை கொட்டி வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து கடந்த ஒரு மாதமாக தடப்பள்ளி–அரக்கன் கோட்டை மற்றும் கீழ்பவானி பாசனத்துக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் 75 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த 14–ந்தேதி 70 அடியாக சுருங்கியது.
தற்போது பெய்யும் பருவ மழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 78.34 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 642 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த 14–ந்தேதிக்கு பின்னர் பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியில் இருந்து 78.34 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுதும் கடந்த சில நாட்களாக மழை பெய்வதால் பவானி ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கீழ்பவானி பாசனத்துக்கும் தண்ணீர் திறப்பு 900 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில் 84 மி.மீட்டர் மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக பெருந்துறையில் 63 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

0 comments: