Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
திருப்பூரில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி இறந்த சிறுமிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கூட்டத்தினர் ராயபுரம் ரோட்டில் ஊர்வலம் செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் வளையங்காடு வாசுகி நகரில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளான வடமாநிலத்தை சேர்ந்த 3 வயது சிறுமி கடந்த 3–ந்தேதி இறந்தாள். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து இறந்த சிறுமிக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் சேவா கமிட்டி தலைவர் சம்பத்குமார், நிர்வாகி கிஷோர்ஜெயின், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் காடேஷ்வரா சுப்பிரமணியம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிஷோர்குமார், தாமு மற்றும் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.
இவர்கள் பாலியல் வன்முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், சிறுமியின் இறப்புக்கு காரணமான குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். இறந்த சிறுமியின் படத்துக்கு இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் சேவா கமிட்டி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் கோஷங்களை எழுப்பியபடி ராயபுரம் ரோட்டில் ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஊர்வலம் செல்ல ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் போலீசார் அவர்களை பள்ளி வளாக வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த கூட்டத்தினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போலீசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு தாசில்தார் சிவகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்னகேசவன், ராஜசேகரன் மற்றும் போலீசார், கூட்டத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திருப்பூர் சேவ சங்க கமிட்டி தலைவர் சம்பத்குமார் கூறும்போது, சிறுமி இறப்புக்கு காரணமான குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனை கொடுக்கப்படக்கூடாது. தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. நீதி கிடைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை போலீசாரும், அரசும் எடுக்க வேண்டும் என்று கூறினார்.

0 comments: