Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர ம.தி.மு.க. சார்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா டவுன்ஹால் அருகில் உள்ள விநாயகர் கோவில் முன் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகர செயலாளர் சிவபாலன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணி, துணை செயலாளர் வக்கீல் தமயந்தி ஆகியோர் முன்னிலைவகித்தனர். எம்.எல்.எப். பனியன் சங்க செயலாளர் முத்துகுமாரசாமி, நெசவாளர் அணி செயலாளர் சுப்பிரமணியம், வக்கீல் அணி செயலாளர் கந்தசாமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ரத்தினசாமி, கவுன்சிலர் கல்யாணி உள்பட 20 பேர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் தயார் செய்யப்பட்டு பெரிய பாத்திரத்தில் வைத்து கோவில் முன் மேஜையில் வைத்து இருந்தனர். நிகழ்ச்சி தொடங்கும் முன், அங்கு வந்த திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கக்கூடாது என்று ம.தி.மு.க.வினரிடம் கூறினார்கள். அத்துடன் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் இருந்த பாத்திரத்தை போலீசார் பறிக்க முயன்றனர்.
இதனால் போலீசாருக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதைத்தொடர்ந்து ம.தி.மு.க.வினர் போலீஸ் தடையை மீறி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கலை வழங்கினார்கள். உடனே போலீசார் ம.தி.மு.க.வினர் 20 பேரை கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.
இதனால் கோவில் முன் கேட்பாரற்று இருந்த சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் ஆகியவற்றை பொதுமக்கள் தாங்களாகவே இலையில் எடுத்து வைத்து சாப்பிட தொடங்கினார்கள். இதை பார்த்த போலீசார் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் ஆகியவற்றை பாத்திரத்துடன் ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருப்பூர் நேரு வீதியில் உள்ள காவேரி அம்மன் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: