எக்ஸ்பிரஸ் ரயிலில் பாலியல் தொந்தரவு செய்த போலீஸ்காரரை செருப்பால் தாக்கினார் ஆசிரியை. ஐஜி உத்தரவின்பேரில் சம்பந்தப் பட்ட போலீஸ்காரர் மீது தாம்பரம் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா (37, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வேலூரில் ஆசிரியையாக பணிபுரிகிறார். அரையாண்டு விடுமுறைக்காக குழந்தைகளுடன் கோவில்பட்டி சென்ற ஸ்டெல்லா, சென்னையில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனக்கும், 2 குழந்தைகளுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்தார். ஆனால், அவர்களுக்கு படுக்கை வசதி சீட் கிடைக்கவில்லை. இருக்கை வசதி (ஆர்ஏசி) மட்டுமே கிடைத்தது. இதனால் ஒரே சீட்டில் 3 பேரும் அமர்ந்து பயணம் செய்தனர்.
அந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர், ஸ்டெல்லாவிடம் பேச்சு கொடுத்தார். ரயிலில் ரோந்து செல்லும்போது படுக்கை சீட் காலியாக இருந்தால் தகவல் தெரிவிப்பதாக சொல்லி செல்போன் எண்ணை கேட்டார். போலீஸ்காரர் என்பதால் ஸ்டெல்லாவும் தனது செல்போன் எண்ணைக் கொடுத்தார். நள்ளிரவு 1 மணியளவில் ஸ்டெல்லாவின் செல்போனுக்கு தொடர்புகொண்ட போலீஸ்காரர், ‘‘படுக்கை வசதி கொண்ட சீட் காலியாக இல்லை. எனக்கு ஒதுக்கப்பட்ட சீட் உள்ளது. குழந்தைகளை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் வந்தால் இங்கே படுத்துக் கொள்ளலாம்’’ என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்டெல்லா, போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.
சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு திரும்பி வந்த போலீஸ்காரர், குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த ஸ்டெல்லாவிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். திடுக்கிட்டு எழுந்த ஸ்டெல்லா, ஆத்திரத்தில் போலீஸ்காரரை செருப்பால் தாக்கினார். ஸ்டெல்லாவின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த சக பயணிகளும் அந்த இடத்தில் கூடினர். அப்போது ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. நிலைமை விபரீதமானதை உணர்ந்த போலீஸ்காரர், ரயிலில் இருந்து குதித்து தப்பிவிட்டார். அவர் விட்டுச் சென்ற குறிப்பு புத்தகம் (பீட் புக்), லத்தியை ஸ்டெல்லா எடுத்து வைத்துக்கொண்டார்.
அதே ரயிலில் வந்த மற்றொரு போலீஸ்காரரிடம் நடந்த சம்பவங்களை ஸ்டெல்லா கூறினார். திருச்சி ரயில் நிலையத்தில் இறங்கி புகார் கொடுக்குமாறு கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். திருச்சியில் ரயில் சிறிது நேரமே நிற்கும் என்றதால், ஸ்டெல்லா அங்கு இறங்கவில்லை. நேற்று காலை தாம்பரத்தில் இறங்கியதும் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார். சம்பவம் நடந்தது திருச்சி எல்லை என்பதால், அங்கு சென்று புகார் கொடுக்கும்படி போலீஸார் கூறியுள்ளனர்.
இதையடுத்து, ரயில்வே ஐஜி சீமா அகர்வாலின் செல்போன் நம்பரை பெற்று அவரிடம் நடந்த விவரங்களை ஸ்டெல்லா விளக்கினார். ஐஜி உத்தரவின் பேரில், தாம்பரம் போலீஸார் புகாரை பெற்றுக்கொண்டனர். தான் கைப்பற்றி வைத்திருந்த பீட் புத்தகம், லத்தியை போலீஸாரிடம் கொடுத்தார் ஸ்டெல்லா.
பீட் புத்தகத்தை வைத்து நடத்திய விசாரணையில், ஸ்டெல்லா விடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது மதுரை ரயில்வே போலீஸ்காரர் வினோத் என்பது தெரிந்தது. அவர் மீது தாம்பரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கை திருச்சி போலீஸ் நிலையத்துக்கு மாற்றியுள்ளனர்.
இதற்கிடையே ஸ்டெல்லாவின் புகார் குறித்து விசாரணை நடத்திய தென்மண்டல ரயில்வே எஸ்.பி. ஆனிவிஜயா, போலீஸ்காரர் வினோத்தை சஸ்பெண்ட் செய்துள்ளார்