Sunday, April 05, 2015

On Sunday, April 05, 2015 by Unknown in ,    
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிறுநீரகம், நரம்பியல், இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை உபகரணங்கள் தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.97 கோடி மதிப்பில் பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் பொது மருத்துவம், எலும்பு முறிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, மகப்பேறு உள்பட பல்வேறு துறை சார்ந்த பிரிவுகளில் தலைமை மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். 500 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு சராசரியாக 300 நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தனியார் மருத்துவ மனைக்கு இணையாக இந்த மருத்துவ மனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு 16 படுக்கைகள் உள்ளன.
ஆனால், சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக வருவோருக்கு எம்ஆர்ஜ ஸ்கேன் வசதி இல்லாததால் மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கே பரிந்துரை செய்கின்றனர். இந்த ஸ்கேன் வசதியை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விரைந்து நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு பணிபுரியும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் மதுரையிலிருந்தே வந்து செல்கின்றனர். இதனால், நோயாளிகளுக்கு போதிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
சிறுநீரகம், நரம்பியல், இதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மருத்துவர்கள் இல்லை. பல், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் இருந்தும், அதற்கான உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்கவில்லை. மேற்கண்ட பிரச்னைகளுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்வதுடன், மக்கள் பிரதிநிதிகளும் இம்மருத்துவமனையின் தரத்தை உயர்த்தவும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: