Wednesday, December 09, 2015

On Wednesday, December 09, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடியில் பள்ளியில் பாடம் எடுக்காமல் அடிக்கடி செல்போனில் பேசிய ஆசிரியையைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி, மாநகராட்சிக்கு உட்பட அத்திமரப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கூட்டாம்புளியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். மேலும் 3 ஆசிரியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். இதில், தூத்துக்குடியைச் சேர்ந்த ரத்னா என்பவர் 6, 7, 8 ஆகிய மாணவ, மாணவியர்களுக்கு வகுப்பு ஆங்கில பாடம் எடுத்து வந்தார். 

இவர் கடந்த 2013 ஏப்ரல் மாதம் முதல் இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். ஆனால், பணியில் சேர்ந்த நாள் முதல் அடிக்கடி விடுப்பு எடுப்பாராம். கடந்த 2 ஆண்டுகளில் 500 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வரவில்லையாம். பள்ளிக்கு வந்தாலும் பாடம் எடுக்காமல், செல்போனில் பேசிக்கொண்டே இருப்பாராம். இதனால் கடந்த காலாண்டு தேர்வில் ஆங்கில பாடத்தில் மாணவ, மாணவியர்கள் அனைவரும் பெயிலாகி விட்டனராம். 

இதையடுத்து அந்த ஆசிரியையை மாற்ற வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த ஆசிரையை ரத்னா, மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தாராம். இதனால் மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் சமாதானப்படுத்தினார். 

மேலும், நேற்று மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் தொடக்க கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

0 comments: