Wednesday, September 28, 2016

On Wednesday, September 28, 2016 by Unknown in    

திருப்பூர்,2020–ம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ராஜா எம்.சண்முகம் நேற்று கூறினார்.புதிய நிர்வாகிகள்

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று இரவு திருப்பூர் அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ஏ.சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம் ஆண்டறிக்கை மற்றும் வரவு–செலவு கணக்கை தாக்கல் செய்தார்.இதைத்தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளை, தேர்தல் நடத்தும் அதிகாரியான வக்கீல் ராமமூர்த்தி அறிவித்தார். தலைவராக ராஜா எம்.சண்முகம், துணைத்தலைவராக வேலுசாமி, பொதுச்செயலாளராக விஜயகுமார், இணைச்செயலாளராக சம்பத்குமார், பொருளாளராக மோகன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக குமார், கொண்டசாமி, நவமணி, சின்னசாமி, ஆனந்த், துரைசாமி, குமார், என். பழனிச்சாமி, சோமசுந்தரம், மகேஷ், சண்முகம், ராஜேந்திரன், அருண் ராமசாமி, செந்தில்குமார், கோவிந்தராஜூ, முருகேசன், கே.ராமசாமி, ராமசுவாமி, கருணாநிதி, வேலுசாமி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.ரூ.1 லட்சம் கோடி

இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் ராஜா எம்.சண்முகத்திடம், முன்னாள் தலைவர் ஏ.சக்திவேல் பொறுப்புகளை ஒப்படைத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.விழாவில் தலைவர் ராஜா எம்.சண்முகம் பேசியதாவது:–உழைப்பால் உயர்ந்த ஊர் திருப்பூர். தொழில் வளர்ச்சி பெற்ற இந்த ஊருக்கு நம்மால் முடிந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில், தொழிலாளர் நலன், சமுதாயம் ஆகிய மூன்று வகையான பார்வைகளில் கவனம் செலுத்தப்படும். தொழில் பார்வையில் திருப்பூரில் பின்னலாடை வாரியம் அமைப்பது, டிசைனர் ஸ்டூடியோ அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும். தொழிலை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்ல டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு, பயிற்சி கூடம் அமைக்கப்படும்.தொழிலாளர் நலன் என்ற பார்வையில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் அமைக்க மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்படும். சமுதாய பார்வையில், ‘மூன்றாம் கண்’ திட்டம் விரிவுபடுத்தி நகர பாதுகாப்பு பலப்படுத்தும் வகையில் மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். தற்போது ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் கோடிக்கு பின்னலாடை வர்த்தகம் நடக்கிறது. 2020–ம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.முடிவில் பொதுச்செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

0 comments: