Wednesday, May 20, 2020

On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in ,    
மணப்பாறை அருகே
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை.
உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
             

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டியைச் சேர்ந்தவர் பிச்சாண்டவர். விவசாயி. இவருக்கும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்த தாமரைச் செல்விக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன் திருமணம் நடைபெற்றது.


             
பின்னர் நிறைமாத கர்ப்பிணியான தாமரைச் செல்விக்கு கடந்த மார்ச் மாதம் 9 ம் தேதி நள்ளிரவு மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் 10 ம் தேதி காலை பிறந்த குழந்தையின் தொடையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் உடல்நிலையும் சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனையிலேயே 15 நாட்களாக தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஆனாலும் குழந்தைக்கு அவ்வபோது காய்ச்சல் ஏற்பட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதுதொடர்பாக மரவனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு முறை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போதும் கொரோனா காலகட்டமாக இருப்பதால் சிகிச்சை அளிக்க மறுத்து மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி 45 நாட்களுக்கு பின்னர் அந்த குழந்தைக்கே இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தை இன்று காலை முதல் காய்ச்சல் ஏற்பட்டு தொடர்ந்து கதறி அழவே வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி தொடையில் முதலில் தடுப்பூசி போட்ட இடத்தை பார்த்த போது அதில் லேசாக ஊசி ஒன்று தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து லேசாக அமுக்கி பார்த்த போது பாதி ஒடிந்த நிலையில் இருந்த ஊசி முழுவதுமாக வெளியே வந்தது.
இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான தாமரைச் செல்வி குடும்பத்தினர் மீண்டும் குழந்தையை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை கூறி தொடையில் உடைந்த நிலையில் இருந்து எடுக்கப்பட்ட ஊசியை காண்பித்தனர்.
மேலும் முதலில் தடுப்பூசி போட்டு ஊசி உடைந்து தொடையிலேயே விட்டுச் சென்ற செவிலியர் மீது நடவடிக்கை எடுத்திடக் கோரி மருத்துவ அதிகாரியிடம் புகாரும் அளித்தனர்.
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு இரண்டாவது நாளே போடப்பட்ட ஊசி உடைந்த நிலையில் சுமார் 70 நாட்கள் தொடையிலேயே இருந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட செவிலியரை உடனடியாக பணி நீக்கம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையும் மேலோங்கி உள்ளது.

பேட்டி :
1. தாமரைச்செல்வி, குழந்தையின் தாய்.
2. அமிர்தம், குழந்தையின் அம்மாச்சி.

0 comments: