Wednesday, September 21, 2016

On Wednesday, September 21, 2016 by Unknown in    


திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் திங்கட்கிழமையான நேற்று கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதையொட்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்க சுமார் 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு இருந்தனர்.இந்தநிலையில், திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த ஜீவானந்தம்(வயது 35), அவருடைய மனைவி கார்த்திகா(28) ஆகியோர் வந்திருந்தனர். அப்போது, அவர்கள் திடீரென தாங்கள் பாட்டிலில் கொண்டு வந்த டீசலை உடலில் ஊற்றி, நீதிவேண்டும், நீதிவேண்டும், எங்கள் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கார்த்திகா கையில் இருந்த டீசல் பாட்டிலை தட்டிவிட்டனர். மேலும் கார்த்திகா, ஜீவானந்தம் ஆகியோர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றியதுடன், அவர்கள் கையில் வைத்திருந்த தீப்பெட்டியையும் பிடுங்கி எறிந்தனர்.ரூ.17 லட்சம் மோசடி

பின்னர் அந்த தம்பதியை மீட்டு, போலீஸ் வேனில் ஏற்றி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்திய போலீஸ் விசாரணையில், அவர்கள், சாமுண்டிபுரத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.17 லட்சம் கொடுத்து 4½ சென்ட் நிலத்தை வாங்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த இடத்தில் திடீரென கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மூர்த்தியிடம் ஜீவானந்தம் கேட்டபோது, அவர் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை ரூ.17 லட்சத்துக்கு விற்று மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் கடந்த 6 மாதமாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும், இதனால் விரக்தி அடைந்த ஜீவானந்தம், தனது மனைவி கார்த்திகாவுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாநகர கமிஷனர் அலுவலகத்துக்கு நாளை(இன்று) வரும்படியும், அப்போது, உங்கள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி போலீசார் அனுப்பிவைத்தனர்.

0 comments: