Monday, November 25, 2019

On Monday, November 25, 2019 by Tamilnewstv   
எதிர்வரும் டிசம்பர் 1 ம் தேதியன்று சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் சிலம்பப்போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்றுள்ள திருச்சியைச் சேர்ந்த உலக சிலம்ப சாதனைச் சிறுமி சிலம்பம்



சுகிதா மோகன் அவர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவரை சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரவேற்று வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் ஐந்திணை மைந்தர்கள் குழு, சுகித்தாவின் சாதனையை பாராட்டும்விதமாக நேற்று ஞாயிறு (24/11/2019) மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் முஸ்தபா வணிகவளாகம் எதிர்புறம் அமைந்திருக்கும் ஆனந்தபவன் உணவகத்தின் மேல்தளத்திலுள்ள அரங்கில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அந்நிகழ்வில், சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் ஜேவிகேம் நிறுவனம் & மித்ரா குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான தமிழார்வலர் திருமதி. விஜிஜெகதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான தமிழ்ச்சுடர் திரு. அ. வை. கிருஷ்ணசாமி அவர்கள், தமிழ் இலக்கியக் களம் அமைப்பின் தலைவர், சொல்லின் செல்வர் முனைவர் திரு. இரத்தின வேங்கடேசன் அவர்கள் மற்றும் இலக்கியச் சொற்ப்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் முனைவர் திரு. மன்னை க. இராஜகோபாலன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான திரு.துரை.மருதீசுவரன் அவர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தமிழார்வலர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். அதனையடுத்து பேசிய சிறப்பு விருந்தினர்கள் அனைவரும், சிங்கப்பூரில் நடைபெறும் முதல் சிலம்ப நிகழ்வில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினர்களாக தங்களை அழைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இதுபோன்ற நிகழ்வின் மூலம் இனி சிங்கப்பூர் இளைஞர்களும் நமது மரபுக்கலையை கற்றுக்கொள்ள ஆர்வம்காட்டுவார்களெனவும் தெரிவித்தனர். மேலும் சிலம்பத்தின் வரலாறுபற்றியும், அதன் அவசியம்பற்றியும், குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் நமது பெண்பிள்ளைகளுக்கு இதுபோன்ற நமது மரபுக்கலைகள் எப்படியெல்லாம் தற்காப்புத் திறனை வளர்த்துக்கொள்ள உதவுகிறதென பேசியதோடுமட்டுமில்லாமல், இனி சிங்கப்பூரில் இதுபோன்ற சிலம்ப நிகழ்வுகளை அடிக்கடி நடத்தவேண்டு மெனவும் கேட்டுக்கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியின் நாயகி, சாதனைச் சிறுமி சிலம்பம் சுகித்தா மோகன் அவர்களை சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வாழ்த்திப்பேசியதோடுமட்டுமில்லாமல் அந்நிகழ்ச்சின் ஏற்பாட்டுக்குழுவான ஐந்திணை மைந்தர்கள் குழு நண்பர்களின் சார்பாக சிறுமிக்கு நினைவுப்பரிசையும் அணிவித்து பாராட்டினார்.

மேலும் சிறுமி சுகித்தாவின் சிலம்ப ஆசிரியரும் சுருளி ஆண்டவர் சிலம்பக்கூடத்தின் பயிற்சியாளருமான திரு அரவிந்த் மற்றும் மலேசிய சிலம்பக்கோர்வையின் நிறுவனரும், பயிற்சியாளருமான கலைமாமணி திரு.அன்பழகன் குப்புசாமி ஆகியோருக்கு ஐந்திணை மைந்தர்கள் குழு சார்பாக நினைவு கேடயம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நெறியாளராக ஐந்திணை மைந்தர்கள் குழுவின் உறுப்பினர், சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் புக்கிட் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் தலைவர், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் எய்ம் டூ ஹை துணைத்தலைவருமான தமிழ்மகன் (எ) கண்ணன் அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

மாலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியானது இறுதியில் ஐந்திணை மைந்தர்கள் குழுவின் மற்றொரு உறுப்பினரான திரு. வெற்றிவேல் அவர்கள் நன்றியுரை வாசிக்க இரவு 9மணிக்கு இரவு விருந்தோடு நிறைவுற்றது. இந்நிகழ்வில் ஏராளமான சிங்கைவாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர்.

0 comments: