Monday, July 21, 2014

On Monday, July 21, 2014 by Unknown in , ,    



திருப்பூர், ஜூலை 21-
திருப்பூர் முருங்கப்பாளையம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை சார்பில் நடத்தப்பட்டு வரும் இலவச மாலை நேர வகுப்பு ஐந்தாண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
முருங்கம்பாளையம் வாலிபர் சங்க கிளை அலுவலகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக அப்பகுதியில் வாழும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் வீட்டு குழந்தைகளுக்கு இலவச மாலை நேர வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜூலை மாதத்தில் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த மாலை நேர வகுப்பில், தற்போது 35 மாணவர்கள் படித்து வருகின்றனர். 
கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இங்கு கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தீபா என்ற பட்டதாரி பெண், ஆசிரியையாக இருந்து இந்த வகுப்புகளில் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார். 
இது தவிர சனிக்கிழமை நாளில் விளையாட்டு, ஓவியம் போன்று பலவிதமான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பதிவேடு தயார் செய்து அதிக நாட்கள் வகுப்பிற்கு வருகை தரும்  மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை இலவசமாக வழங்கப்படுகிறது.
முருங்கப்பாளையம் கிளை வாலிபர் சங்க தலைவர் அருள் பிரகாஷ் தலைமையில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆசிக், ரியாஸ், கோகுல் ஆகியோர் கண்காணித்து வகுப்பை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
இந்த ஐந்தாண்டு காலத்தில் இதுவரை சுமார் 175 பேர் இங்கு படித்து பயனடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்கள் சுமார் 15 பேர் அரசுப் பொதுத்தேர்வில் நானூறுக்கும் மேல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருப்பதுடன், இங்கு இதுவரை படித்த எந்தவொரு மாணவரும் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நூறு சதவிகிதம் வெற்றி பெற வைக்கும் வாலிபர் சங்கத்தின் இந்த மாலை நேர வகுப்புக்கு இந்த பகுதி மக்கள் நம்பிக்கையோடு தங்கள் குழந்தைகளை அனுப்பி வருகின்றனர். தொய்வின்றி இப்பணியை தொடர்ந்து கொண்டுசெல்வோம் என வாலிபர் சங்க ஊழியர்கள் நம்பிக்கையோடு தெரிவித்தனர்.


0 comments: