Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by Unknown in    

திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது ராஜாபாளையம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரது 10 ஆடுகள், கடந்த ஜூலை 13-ம் தேதி திருடு போனது. இதுகுறித்து, வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், கீழ்பென்னாத்தூர் அடுத்த சின்னகழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ஏழுமலை (23), கீழ்பென்னாத்தூர் அடுத்த கார்ணாம்பூண்டி கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செந்தமிழ்ச்செல்வன் (22) ஆகியோர் ஆடுகளைத் திருடியதாக தெரியவந்ததாம்.
இதையடுத்து, இருவரையும் வேட்டவலம் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். சில நாட்கள் கழித்து இருவரும் ஜாமீனில் வெளியே வந்து, தினமும் வேட்டவலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம்:
ஏழுமலை, செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரை கைது செய்த போலீஸார், அப்போது அவர்கள் ஓட்டிவந்த பைக் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோது பைக் பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்கு ஆவணங்களில் பதிவு செய்யவில்லையாம்.ஜாமீனில் வந்தபிறகு தனது பைக்கை திரும்பத் தருமாறு காவல் ஆய்வாளர் சீனிவாசனிடம், ஏழுமலை கேட்டாராம். பைக்கை தராமல் தொடர்ந்து காலம் கடத்தி வந்த ஆய்வாளர் சீனிவாசன், ரூ.10 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பைக்கை திரும்பத் தர முடியும் என்று கூறினாராம்.
இதுகுறித்து, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புப் போலீஸில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) ஏழுமலை புகார் கொடுத்தார். போலீஸாரின் அறிவுரையின்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) மதியம் ஏழுமலை வேட்டவலம் காவல் நிலையத்துக்குச் சென்றார்.அப்போது, பணியில் இருந்த ஆய்வாளர் சீனிவாசனிடம் ரூ.10 ஆயிரத்தை ஏழுமலை கொடுத்துள்ளார். உடனே, பணியில் இருந்த நிலைய எழுத்தரும், சிறப்பு உதவி ஆய்வாளருமான கிருஷ்ணசாமியிடம் பணத்தை கொடு என்று ஆய்வாளர் சீனிவாசன் கூறினாராம்.
அதன்படி, சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணசாமி ரூ.10 ஆயிரத்தை வாங்கி, ஆய்வாளர் சீனிவாசனிடம் கொடுத்தாராம். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார், ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணசாமி ஆகியோரை கைது செய்தனர்.தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) இரவு வரை இருவரிடமும் வேட்டவலம் காவல் நிலையத்திலேயே லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: