Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by farook press in ,    
திருச்சி தொழில் அதிபரிடம் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 34). இவர் சொந்தமாக வீடுகளுக்கு உள்அலங்கார வேலை செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்த இவருக்கு ரூ.20 லட்சம் தேவைப்பட்டது. இதற்காக திருச்சியை சேர்ந்த பரமேஸ்வரி என்பவரை கோபாலகிருஷ்ணன் அணுகினார்.
அவர், திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த கருணாகரன்(60) என்பவர் மூலம், திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த சாமிநாதனின் மனைவி சிவகாமியை(62) அறிமுகம் செய்துவைத்தார். அப்போது, அவர் மகளிர் சுயஉதவி குழு மூலம் ரூ.20 லட்சம் கடன் வாங்கி தரவேண்டும் என்றால் ரூ.3 லட்சம் கமிஷனாக வழங்கவேண்டும் என்று கூறினார். இதை நம்பிய கோபாலகிருஷ்ணன், ரூ.3 லட்சத்தை பரமேஸ்வரி, கருணாகரன், தங்கவேல், சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் சிவகாமியிடம் கொடுத்தார்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் கோபாலகிருஷ்ணனுக்கு அவர்கள் கடன் பெற்று தரவில்லை எனத்தெரிகிறது. இதுகுறித்து அவர் சிவகாமியிடம் கேட்டபோது, ‘கடன் பெற்று தரமுடியாது. கொடுத்த பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன்’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் இதுபற்றி திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார்.
அதன்பேரில் சிவகாமி, பரமேஸ்வரி, கருணாகரன், தங்கவேல், சாமிநாதன் ஆகிய 5 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தார். விசாரணையில் கோபாலகிருஷ்ணன் தவிர மேலும் 4 பேரிடம் இதுபோல் தலா ரூ.3 லட்சம் என்று மொத்தம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிவகாமி, கருணாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக தலைமறைவாக உள்ள பரமேஸ்வரி, தங்கவேல், சாமிநாதன் ஆகிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

0 comments: