Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by farook press in ,    
கோவை அருகே இளம்பெண்ணை கொலை செய்து, பிணத்தை கிணற்றில் வீசிய கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது–
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காசிக்கவுண்டன் புதூரில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் கடந்த 23–ந்தேதி 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கினர்.
இந்த நிலையில் பல்லடம் வதம்பச்சேரியை சேர்ந்த லிங்க மூர்த்தி என்பவரின் மகள் சவுந்தர்யாவை காணவில்லை என்று பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்ட விவரம் சூலூர் போலீசாருக்கு தெரியவந்தது. எனவே கிணற்றில் பிணமாக கிடந்தது சவுந்தர்யாவாக இருக்கலாம் என்று சூலூர் போலீசார் சந்தேகித்தனர். எனவே அவர்கள் லிங்க மூர்த்திக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவர்களிடம் கிணற்றில் வீசப்பட்ட பெண்ணின் உடலை காட்டினர். அப்போது அவர் தனது மகளின் உடல்தான் அது என்று கூறி கதறி துடித்தார்.
இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், சவுந்தர்யா எப்படி இறந்தார்? கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல கோணங்களில் விசாரித்தனர். இந்தநிலையில் பிரேத பரிசோதனையில் சவுந்தர்யாவை கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்தது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது குறித்து போலீசாரின் விசாரணை இன்னொரு கோணத்தில் சென்றது. இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:–
சவுந்தர்யா கடந்த 17–ந்தேதி பல்லடத்தில் இருந்து சேலத்துக்கு பஸ்சில் சென்றுள்ளார். பின்னர் சேலத்தில் இருந்து கோவைக்கும், பின்னர் கோவையில் இருந்து பல்லடத்துக்கும் பஸ்சில் வந்துள்ளார். அதன் பின்னர் தான் அவர் மாயமாகி உள்ளார். எனவே அவர் வந்த பஸ் டிரைவர், கண்டக்டர்களிடம் விசாரித்தால் தகவல் கிடைக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் குறிப்பிட்ட ஒரு பஸ்சில் அவர் அடிக்கடி பயணம்செய்தது தெரியவந்தது. அந்த பஸ் டிரைவரிடம்விசாரித்தபோது சவுந்தர்யா வழக்கமாக எங்கள் பஸ்சில்தான் வந்து காரணம் பேட்டையில் இறங்குவார். பின்னர் அவர் சத்தியமங்கலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் தனியார் பஸ்சில் செல்வது வழக்கம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த பஸ்சின் கண்டக்டரான மோகன்ராஜ் (வயது 31) என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவரிடம் துருவித்துருவி விசாரித்தனர். அதில் சவுந்தர்யாவுக்கும் மோகன்ராஜூக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது தெரியவந்தது. மோகன் ராஜூக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளது. ஆனால் இதை சவுந்தர்யாவிடம் மறைத்துவிட்டார். இந்த நிலையில் சவுந்தர்யாவும், மோகன்ராஜூம் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
சம்பவத்தன்று சேலத்தில் இருந்து பல்லடத்துக்கு சவுந்தர்யா பஸ்சில் வந்து இறங்கியதும், மோகன்ராஜை வழக்கம்போல் செல்போனில் அழைத்துள்ளார். அங்குவந்த மோன்ராஜூம், சவுந்தர்யாவும் சேர்ந்து அருகில் உள்ள காசிக்கவுண்டன் புதூர் சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது சவுந்தர்யா, இனி எத்தனை காலம் இப்படி நாம் தனிமையில் சந்திப்பது, என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள். சேர்ந்து வாழலாம் என்று கூறி உள்ளார். ஆனால் ஏற்கனவே திருமணமான மோகன்ராஜூக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் விடாமல் சவுந்தர்யா தொடர்ந்து அவரிடம் வற்புறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த மோகன்ராஜ், சவுந்தர்யாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் அவரது உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு மாயமானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மோன்ராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

0 comments: