Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by TAMIL NEWS TV in ,    


கூட்டுறவு கடன்சங்க உறுப்பினர்களின் பணத்தை கையாடல் செய்த சங்க செயலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூட்டுறவு சங்க செயலாளர்

ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையில், நெருஞ்சிப்பேட்டை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு கடந்த 2005-2006-ம் ஆண்டுகளில் நெருஞ்சிப்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த எஸ்.முருகேசன் (வயது 49) என்பவர் செயலாளராக இருந்தார். உதவி செயலாளராக நெருஞ்சிப்பேட்டை இந்திரா வீதியை சேர்ந்த முருகன் (51) என்பவரும், காசாளராக முத்துசாமி வீதியை சேர்ந்த கே.பழனிச்சாமி (47) என்பவரும் பணியாற்றி வந்தனர்.

இந்தநிலையில் நெருஞ்சிப்பேட்டை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினரான அர்த்தநாரீஸ்வரன் என்பவருக்கு அரசு கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. அதன்படி அவருக்கு ரூ.25 ஆயிரத்து 100 கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், இது அர்த்தநாரீஸ்வரன் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அவருக்கு கடன் தள்ளுபடி குறித்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி அவர் கோபி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளரிடம் புகார் செய்தார்.

போலீஸ் விசாரணை

துணைப்பதிவாளர் விசாரணையின் போது சங்கத்தின் செயலாளர் முருகேசன், உதவி செயலாளர் முருகன், காசாளர் கே.பழனிச்சாமி ஆகியோர் இதுபோல் பலரிடம் முறைகேடு செய்து பணத்தை கையாடல் செய்து இருப்பது தெரிய வந்தது. எனவே கோபி துணைப்பதிவாளர் சென்னை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா உத்தரவிட்டார்.

அதன்பேரில் கோவை துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசேகரன் மேற்பார்வையில் ஈரோடு குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பி.பி.முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, சங்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

ரூ.2 லட்சம் கையாடல்

அப்போது சங்க செயலாளர் முருகேசன், உதவி செயலாளர் முருகன், காசாளர் பழனிச்சாமி ஆகியோர் செய்த கையாடல்கள் வெளி வந்தன. சங்க உறுப்பினர் எம்.ராமசாமி என்பவருடைய சர்க்கரை ஆலை ஒப்பந்த கடன், சின்னப்பகவுண்டர் என்பவருக்கு வரவேண்டிய தொகையை முத்துக்குமார் என்பவருடைய கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்தது, விஸ்வநாதன் என்பவருக்கு சர்க்கரை ஆலை ஒப்பந்த கடன் என்று சுமார் 10 உறுப்பினர்களுக்கான ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 820 கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி ஈரோடு வணிககுற்றப்புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட எஸ்.முருகேசன், முருகன், பழனிச்சாமி ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் கோவை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 4-ல் மாஜிஸ்திரேட்டு தீபா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்ய போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர்.

0 comments: