Sunday, August 03, 2014

On Sunday, August 03, 2014 by Unknown in , ,    

தற்கொலை செய்யப்போவதாக கடிதம்: குடும்பத்துடன் வங்கி ஊழியர் மாயம்



சென்னை எம்.ஜி.ஆர். முருகேசன் தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது38). தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவரது மனைவி ரேவதி (35). வீடு வீடாக சென்று துணி மணிகள், அழகு சாதன பொருட்கள் விற்று வருகிறார். இவர்களது மகள்கள் ரோஸ்மாலினி (10), ஹரிணி (8).
நேற்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் சுந்தரேசன் குடும்பத்துடன் பங்கேற்றார். பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் குடும்பத்துடன் மாயமாகி விட்டார்.
இந்த நிலையில் சுந்தரேசன் கொடுத்த மொய் கவரை உறவினர்கள் பிரித்தனர். அதில் பணம் இல்லை. ஒரு கடிதம் மட்டுமே இருந்தது. அந்த கடிதத்தில், நான் அதே பகுதியில் அழகு கலை நிபுணராக உள்ள ஒரு பெண்ணிடம் கந்து வட்டிக்கு ரூ.2 லட்சம் பணம் வாங்கினேன். அந்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் அந்த பெண் மேலும் பணம் தர வேண்டும் என்று மிரட்டி வருகிறார். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்யப் போகிறேன்’’ என்று எழுதப்பட்டு இருந்தது.
இந்த கடிதம் பற்றி எம்.ஜி.ஆர். நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் ரேவதியின் அண்ணன் துரைமுருகனிடம் உறவினர் தெரிவித்தார். அவர் அந்த கடிதத்துடன் நேற்று மாலை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது புகாரை அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் கொடுக்குமாறு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து துரை முருகன் அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியிடம் புகார் செய்தார். அவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்திருந்ததால் முதலில் சுந்தரேசனின் வீட்டு பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சோதனை நடத்தினார்கள். அங்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று வந்த ஆடைகளை கழற்றி வைத்துவிட்டு வேறு உடை அணிந்து 4 பேரும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
உடனே போலீசார் கந்து வட்டிக்கு பணம் கொடுத்த அழகு கலை நிபுணர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அவரும் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து சுந்தரேசனையும், அவரது குடும்பத்தினரையும் கண்டு பிடிக்க உதவி கமிஷனர் அசோக்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

0 comments: