Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by farook press in ,    
உடுமலை அருகே ஓடும் பஸ்சில் தொழிற்சாலை அதிகாரியிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.19¼ லட்சத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 முக்கிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்தவர் அப்துல்காதர் (வயது 42). இவர் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள பிரபல தனியார் இரும்பு உருக்கு ஆலையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சேலம் செவ்வாய்பேட்டையில் குடியிருந்து வரும் அவர், இந்த ஆலையின் மூலம் வினியோகஸ்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும் இரும்பு கம்பிகளுக்கான தொகையை பல்வேறு ஊர்களுக்கு சென்று வசூல் செய்து வருவது வழக்கம்.
அதன்படி கடந்த மாதம் ஆகஸ்டு 21–ந்தேதி காலை அப்துல்காதர் ஈரோடு, திருப்பூர், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வினியோகஸ்தர்களின் நிறுவனங்களுக்கு (கடைகள்) சென்று பணம் வசூல் செய்து கொண்டு மாலையில் உடுமலைக்கு வந்தார். உடுமலை பகுதியில் உள்ள வினியோகஸ்தர்களிடம் பணம் வசூல் செய்தார்.
உடுமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் சேர்ந்து மொத்தம் ரூ.19 லட்சத்து 27 ஆயிரத்து 710 வசூலானது. அந்த பணத்துடன் பொள்ளாச்சி சென்று வினியோகஸ்தர்களிடம் வசூல் செய்வதற்காக இரவு 7 மணியளவில் உடுமலையில் இருந்து அரசு பஸ்சில் புறப்பட்டார். அந்த பஸ் உடுமலையை அடுத்துள்ள முக்கோணம் சென்றதும் அங்கு பஸ் நிறுத்தத்தில் இருந்து சிலர் பஸ்சில் ஏறினர். அங்கிருந்து புறப்பட்ட பஸ் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அந்தியூர் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது முக்கோணம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் போன்று பஸ்சில் ஏறியவர்களில் 4 பேர் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் பஸ் டிரைவர் யுவராஜை அரிவாள் முனையில் மிரட்டி பஸ்சை நிறுத்தும்படி கூறியுள்ளார். உடனே பஸ் நிறுத்தப்பட்டதும் மற்றவர்கள் 3 பேரும் அப்துல் காதரை அரிவாளை காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணத்தை பறித்துக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி பஸ்சை பின்தொடர்ந்து வந்த ஒரு காரில் அவர்கள் 4 பேரும் ஏறி தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து அப்துல்காதர் உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார்சிங் உத்தரவின் பேரில் உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்திலிங்கம் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 4 தனிப்படைகளை அமைத்தார். இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து இந்த வழிப்பறி கொள்ளை தொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்த குமார் (வயது 34) என்பவரை கடந்த மாதம் 31–ந்தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து கிடைத்த தகவல்களை தொடர்ந்து போலீசார் துப்புதுலக்குவதை தீவிரப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக கோவை போத்தனூரை சேர்ந்த பாய் என்கிற பிரபு என்கிற குருபிரசாத் (34), சேலம் மாவட்ட திருவள்ளிபட்டியை சேர்ந்த கார் டிரைவர் சதீஷ்குமார் (21) ஆகிய 2 பேரையும் உடுமலை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குருபிரசாத் கோவை மாவட்டத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரின் மகன் ஆகும். சதீஷ்குமார் கார் டிரைவர். வேறு ஒருவருக்கு சொந்தமான காரை கோவிலுக்கு செல்வதற்காக என்று கூறி தனக்கு தெரிந்தவர் மூலம் வாடகைக்கு எடுத்து வந்துள்ளார். அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த 2 பேரிடமிருந்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை கைப்பற்றினர்.
இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அப்துல்காதர் பணம் வசூல் செய்து கொண்டு செல்கின்ற தகவல்கள் யார் மூலம் இந்த கொள்ளையர்களுக்கு தெரியவந்தது என்ற விவரம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொள்ளையர்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்ததாக உடுமலையை சேர்ந்த சுரேஷ் (24), தமிழ்குமார்(38), பிரபாகர்(27) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் சுரேஷ் உடுமலையில் உள்ள இரும்பு கம்பி விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார்.
உடுமலையை அடுத்துள்ள அந்தியூர் அருகே பஸ்சில் கொள்ளை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களில் முக்கிய கொள்ளையர்களாக செயல்பட்ட 3 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

0 comments: