Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் இடைத்தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் அறிவித்துள்ளார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நேற்று கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கூறியதாவது:–
வருகிற 18–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகளை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் அல்லது 2011–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்படவேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வாக்கு எண்ணிக்கை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் –1, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் –3, சிற்றூராட்சி தலைவர் –1, சிற்றூராட்சி உறுப்பினர் –7 என மொத்தம் –12.
மாநகராட்சி வார்டு உறுப்பினர் –1, நகராட்சி வார்டு உறுப்பினர் –2, பேரூராட்சி தலைவர் –2, பேரூராட்சி வார்டு உறுப்பினர் –3, மொத்தம் –8 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான மாதிரி நன்னடத்தை விதிகள் கடந்த மாதம் 28–ந் தேதி முதல் அமலுக்கு வந்து நடைமுறையில் உள்ளது. இம்மாதிரி நன்னடத்தை விதிகள் உள்ளாட்சி தேர்தல்கள் எந்தெந்த பகுதிகளில் நடக்கிறதோ அந்தப் பகுதிக்கு மட்டுமே பொருந்தும். கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றிற்கு உரிய அலுவலரிடம் முன்னதாகவே அனுமதி பெறவேண்டும்.
வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் வழங்கும் அடையாளச்சீட்டுகள் வெற்று வெள்ளைத்தாள்களில் இருக்க வேண்டும். மேலும், அத்தாள்களில் சின்னமோ வேட்பாளரின் பெயரோ அல்லது கட்சியின் பெயரோ எதுவும் இருக்க கூடாது. வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் ஆதரவு கோருவது, தேர்தல் பிரசாரம் செய்வது ஆகியவை சட்டப்படியான குற்றங்களாகும். இக்குற்றத்தில் ஈடுபடும் நபரை பிடியாணையின்றி கைது செய்து தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரலாம். பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அந்த வாக்குச் சாவடிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துறையின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் தேர்தல்கள் சுமூகமான முறையில் நடைபெற போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்களை பொறுத்த அளவில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி சார்பின்றியும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையிலும் நடத்தப்படுகிறது. இதே போன்று நகர்ப்புற உள்ளாட்சி காலிப்பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்படவுள்ள தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவன அலுவலர்களால் சோதனை செய்யப்பட்டு பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. மின்னணு எந்திரத்தில் வேட்பாளர்களின் பட்டியல் விவரம் பொருத்தப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தல்களை பொறுத்த அளவில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் இருப்பில் உள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி இந்த அச்சடிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் இத்தேர்தலில் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கூறினார்.
இந்த கூட்டத்தில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) திரவியம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கார்த்திகை ரத்தினம், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அசோகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா நிர்வாகி வெளிநடப்பு

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன் பேசும்போது, வெள்ளகோவில் நகராட்சி 16–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த ஈஸ்வரன் என்பவரின் மனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்து விட்டனர். ஈஸ்வரனுக்கு முன்மொழிந்தவர் குளறுபடியால் மனுவை தள்ளுபடி செய்து விட்டதாக அதிகாரிகள் தேவையற்ற காரணத்தை கூறுகிறார்கள். அதுபோல் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அதிகாரியின் அறைக்குள் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் மற்ற அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது வேட்பாளருடன் 5–க்கும் மேற்பட்டவர்கள் சென்றுள்ளனர். விதிமுறை மீறலை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. திருப்பூர் மாநகராட்சியில் 45–வது வார்டு பகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிதாக ரோடு அமைத்துள்ளனர். இந்த விதிமுறை மீறல் தொடர்பாக புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தார்.

0 comments: