Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
நீராதாரங்களில் 2.40 டி.எம்.சி., கையிருப்பு உள்ளதால், சென்னையில், இரண்டரை மாதத்திற்கு குடிநீர் வினியோகத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, கோடை வெயில் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீராதாரங்களில், நீர்இருப்பு கணிசமாக குறைந்தது. 

வறட்சி : இதனால், சோழவரம், வீராணம் ஏரிகள் வறண்டுவிடும் நிலையை எட்டின.சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானதால், வீராணம் ஏரியில், ஆழ்துளை குழாய்கள் அமைத்து, தண்ணீரை சென்னைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரிநீர், தற்போது வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரியின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

உயர்வு : தற்போதைய நிலவரப்படி, 1,465 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட, வீராணம் ஏரியில் தற்போது, 1,075 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. ஏரிக்கு, விநாடிக்கு 995 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதேநிலை, தொடரும்பட்சத்தில், விரைவில் ஏரி முழுக்கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது. இதேபோல, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரியில், தற்போது 682 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. 

புழல் ஏரியில், 1,118 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில், 582 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது.சோழவரம் ஏரியில் நீர் இருப்பு இல்லை என்ற போதிலும், மற்ற நான்கு ஏரிகளையும் சேர்த்து 2.40 டி.எம்.சி., நீர்இருப்பு கைவசம் உள்ளது.இதன்மூலம், சென்னையில் அடுத்த இரண்டரை மாதத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கிஉள்ளது.

0 comments: